நாகர்கோவிலை அடுத்த கணேசபுரத்தைச் சேர்ந்தவர் காசி. இவர் மீது நாகர்கோவில் கோட்டார் காவல் நிலையத்தில் சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் புகார் கொடுத்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் காசி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரைத் தொடர்ந்து மற்றொரு பெண் கொடுத்த புகாரின் பேரில் நேசமணி நகர் காவல் துறையினர் காசி மீது மற்றொரு வழக்கைப் பதிவு செய்தனர். இதேபோல் வடசேரியில் மகளிர் காவல் நிலையத்தில் அவர் மீது இரண்டு வழக்குகளும், கன்னியாகுமரி மகளிர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் பதிவாகின.
மேலும் ஒரு கந்து வட்டி வழக்கும் அவர் மீது பதிவானது. இவர் மீது தொடர் புகார்கள் எழுந்ததால், அவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவரைக் காவல் துறையினர் இரு முறை காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது காசி, தன்னால் ஏமாற்றப்பட்ட பெண்கள் பற்றியும், அதற்கு உதவிய நண்பர்கள் பற்றிய விவரங்களையும் காவல் துறையினரிடம் தெரிவித்தார்.
அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், காசியின் நண்பரான டைசன் ஜினோ என்பவர் கைதுசெய்யப்பட்டார். மற்றொரு நண்பர் வெளிநாட்டில் உள்ளதால், அவரைப் பிடிக்க விமான நிலையங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் காசி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
மேலும் காசி வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் சிபிசிஐடி காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாகர்கோவில் சிபிசிஐடி காவல் ஆய்வாளர் சாந்தி தலைமையிலான குழு வழக்கு விசாரணையைத் தொடங்கியது. சிறையில் இருக்கும் காசி, அவரது கூட்டாளியான டைசன் ஜினோ ஆகிய இருவரையும் 10 நாள்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கோரி சிபிசிஐடி காவல் துறையினர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். நீதிமன்றம் அனுமதி கொடுக்கும் பட்சத்தில் காசியின் பல கூட்டாளிகள் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தேர்வைத் தள்ளி வைக்கக் கோரிய வழக்குகள் - முடித்து வைத்த உயர் நீதிமன்றம்