தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு முறைகேடு வழக்கில் முக்கியக் குற்றவாளியாகத் தேடப்பட்டு வந்த காவலர் சித்தாண்டியை ராமநாதபுரம் - சிவகங்கை சாலையில் வைத்து காவல் துறையினர் நேற்று கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவரது கூட்டாளியான காவலர் பூபதியும் தற்போது சிக்கியுள்ளார். அவரிடம் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் மற்றொரு முக்கியக் குற்றவாளியான இடைத்தரகர் ஜெயக்குமாரை தனிப்படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
தேர்வு முறைகேடு வழக்கில் கடந்த 25 ஆம் தேதி, சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தேர்வாணைய ஊழியர் ஓம் காந்தனை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவரது வீட்டில் நடத்திய சோதனையில் பென் டிரைவ் உட்பட முக்கிய ஆவணங்கள் சிக்கின. பின்னர் அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து தற்போது விசாரணைக்காக சிபிசிஐடி காவல்துறையினர் அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.
இந்நிலையில், சிபிசிஐடி தலைமையகத்தில் குரூப்-2ஏ தேர்வு மோசடி தொடர்பாக இடைத்தரகர்கள் சிலரிடம் இன்றும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரம் - காவலர் சித்தாண்டியின் கூட்டாளி பூபதியிடம் தீவிர விசாரணை