தூத்துக்குடி: சமையல் எரிவாயு உருளை வெடித்து, கோடிக்கணக்கு மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்துள்ளன.
தூத்துக்குடி தருவைகுளம் 60 வீடு காலனியைச் சேர்ந்தவர் அந்தோணி ராஜ். இவருக்குச் சொந்தமான விசைப்படகு தருவைகுளம் கடற்கரையில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது.
இதில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள், படகில் வைத்து சமையல் செய்து கொண்டிருந்தனர். அப்போது சமையல் எரிவாயு உருளையில் உள்ள குழாயில் கசிவு ஏற்பட்டு வெடித்து சிதறியது.
இதில் விசைப்படகு முழுவதும் தீ பிடித்து எரிந்தது. அப்போது விசைப்படகு அருகில் ஒரு கன்டெய்னர் லாரியிலிருந்து ஐஸ் கட்டிகளை இறக்கிக் கொண்டு இருந்தனர்.
இந்த வெடி விபத்தில் சிதறிய ஒரு பாகம், கன்டெய்னர் லாரியில் உள்ள டீசல் டேங்கில் பட்டு, தீப்பிடித்து லாரியும் வெடித்துச் சிதறியது. இதனை கண்டு பயந்து அருகிலிருந்தவர்கள் பதறியடித்துக் கொண்டு ஓடினர்.
இதுகுறித்து தகவலறிந்ததும், தூத்துக்குடி சிப்காட் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று சுமார் 3 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.
எரிந்து கொண்டிருந்த விசைப்படகு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்ற விசைப்படகுகளை உடனடியாக மீனவர்கள் அப்புறப்படுத்தி கடலுக்குள் கொண்டுச் சென்றனர்.
இதில் ரூ.30 லட்சம் மதிப்பிலான வலைகளும், ரூ.50 லட்சம் மதிப்பிலான விசைப்படகும் எரிந்து சாம்பலானது.
மேலும் ரூ.50 லட்சம் மதிப்பிலான ஐஸ் கட்டி ஏற்றிவந்த கன்டெய்னர் லாரியும் எரிந்து நாசமானது. இந்தச் சம்பவம் குறித்து தருவைகுளம் கடற்கரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.