தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தென்திருப்பேரை கோட்டூர் தெருவை சேர்ந்தவர் தாஸ். இவர் பாஜகவில் மாவட்ட வர்த்தக அணி செயலாளராக உள்ளார்.
இந்நிலையில் இன்று (நவ.3) காலை 6 மணிக்கு தென்கரையிலுள்ள ஒரு டீ கடையில் டீ குடித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு அடையாளம் தெரியாத நபர் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார்.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாசின் உறவினர்கள் குற்றவாளி விட்டுச்சென்ற இருசக்கர வாகனத்தை தீயிட்டு கொளுத்தினார்கள். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உடனே இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் தலைமையில் காவல் துறையினர் விரைந்து வந்தனர். அதன் பின்னர் அங்கிருந்து தாஸின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், வயலில் ஆடு மேய்ப்பது தொடர்பாக எழுந்த தகராறில் இந்த கொலை நடந்திருக்கலாம் என தெரியவருகிறது. இருப்பினும் கொலைக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.