கோயம்புத்தூர் சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த செந்தில் குமார் என்பவர் புதியதாக வீடு கட்டியுள்ளார். அவர் வீட்டுவரி கட்டுவதற்காக இரண்டு தினங்களுக்கு முன்பு, தெற்கு மண்டல வரி வசூல் மையத்துக்கு சென்றார். அப்போது அதிக பரப்பளவுக்கு வீடு கட்டியுள்ளதாகவும் இதனால் வீட்டு வரியை அதிகமாக செலுத்த வேண்டும் என பில் கலெக்டர் கௌவுஸ் முகைதீன் கூறினார்.
மேலும், குறைத்து செலுத்த வேண்டுமென்றால் 30,000 ரூபாயை லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்று செந்தில் குமாரிடம் நிபந்தனை விதித்தார். ஆனால், தன்னிடம் 18,000 ரூபாய் மட்டுமே உள்ளது, மீதி பணத்தை சிறிது காலத்தில் கொடுத்து விடுவதாக செந்தில் கூறினார்.
இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் அளித்த பிறகு வரி வசூல் மையத்துக்கு சென்ற செந்தில் குமார், 18,000 ரூபாயை முகைதீனிடம் வழங்கினார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை அலுவலர்கள், கெளவுஸ் முகைதீனையும் அவரது உதவியாளர் தனபாலையும் கைது செய்தனர்.