சென்னை தாம்பரம் அடுத்த காந்தி ரோடு முடிச்சூர் சாலை சந்திப்பில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ரவிசந்திரன் தலைமையில் போக்குவரத்து காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த படப்பையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஹரி(40) என்பவரிடம் ஆவணங்கள் இல்லாததால் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரிடமிருந்து ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
சிறிது நேரத்திற்கு பிறகு அதே இடத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்த ஹரி, அவரது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் பலத்த காயமடைந்த ஹரியை அருகில் இருந்தவர்கள் மீட்டு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கே.எம்.சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போக்குவரத்து உதவி ஆய்வாளர் ரவிசந்திரன் தற்கொலைக்கு தூண்டியதாகவும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் தீக்குளித்ததாகவும் ஹரி வாக்குமூலம் அளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் உதவி ஆணையர் அசோகன் உதவி ஆய்வாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.