யானைக்கவுனி பகுதியைச் சேர்ந்தவர் தன்ராஜ் (32). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு சபரி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். ஓட்டேரியில் இருக்கும் இவரது மாமனார் சுந்தர், தன் வீட்டருகிலேயே மளிகைக்கடை நடத்திவருகிறார்.
இந்நிலையில், ஓட்டேரியிலுள்ள மாமனார் வீட்டிற்கு தன்ராஜ் தனது மனைவியுடன் சென்றுள்ளார். அப்போது அங்குள்ள மளிகைக்கடைக்கு அதேப் பகுதியைச் சேர்ந்த சுமன் என்பவர் குடிபோதையில் வந்து சிப்ஸ் வாங்கியுள்ளார். ஆனால் காசுக் கொடுக்காமல் சென்றதால், சபரியின் சகோதரர் விக்னேஷ் குமார் சுமனிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
இதனைப் பார்த்த தன்ராஜும் பொருளை வாங்கியபின் பணம் தராமல் சென்றதைத் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது சுமனுக்கும் தன்ராஜுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
பின்னர் அங்கிருந்து சென்ற சுமன் தனது நண்பர்களை அழைத்து வந்து ஆயுதங்களால் தன்ராஜை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த தன்ராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரது மனைவி சபரிக்கும் லேசான வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் உடற்கூறாய்விற்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு தன்ராஜின் உடல் கொண்டுசெல்லப்பட்டது.
இதனையடுத்து பெரம்பூரைச் சேர்ந்த அஜய் (19), திலக்ராஜ் (23), விக்கி (21), வினோத் (27), பால்பிரவீன் (26), சாமுவேல் (20) ஆகியோரைக் காவல் துறையினர் கைதுசெய்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சுமனை காவல் துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர். சுமன் ஏற்கெனவே கொலை வழக்கில் சிறை சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிவராத்திரி வழிபாடு - பெண்களிடம் தங்கச்சங்கிலி பறிப்பு!