மதுரை தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளராக நந்தகுமார் பணியாற்றுகிறார். இவர் நேற்று(பிப்.6) இரவு பிடிஆர் பாலம் அருகே வாகன தணிக்கை சோதனையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது ஒரு ஆடம்பர கார் மிகவும் வேகமாக வந்தது. நந்தகுமார் அந்த காரை நிறுத்தும்படி சிக்னல் செய்தார். ஆனால் அந்த கார் நிற்காமல் வேகமாக வந்து நந்தகுமார் மீது மின்னல் வேகத்தில் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் அவருக்கு தலை, கால் மற்றும் முழங்கை ஆகியவற்றில் பலத்த காயம் ஏற்பட்டது.
எனவே அவரை சக காவலர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுதொடர்பாக நந்தகுமார் தெப்பக்குளம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதன் பேரில் வழக்குப்பதிவு செய்து நந்தகுமார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரின் நம்பரை கண்டுபிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாநகர போலீஸ் இன்ஸ்பெக்டரை கார் ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'தெகிடி' பட பாணியில் அரங்கேறிய கொலை... 60 லட்சத்திற்கு ஆசைப்பட்டு மனைவியை கொன்ற கணவர்!