சென்னை: துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ.2 கோடியே 47 லட்சம் மதிப்பிலான 4 கிலோ 800 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. இந்த விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்கதுறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அலுவலர்கள் விமானத்தில் வந்த பயணிகளை கண்காணித்தனர். அப்போது விமானத்தில் வந்த பயணி ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக பாதுகாக்கப்பட்ட கழிவறைக்கு சென்றுவிட்டு சிறிது நேரத்தில் வெளியே வந்தார். அவர் வந்ததும் இளைஞர் ஒருவர் உள்ளே சென்றுவிட்டு வந்தார். இதை கண்ட சுங்க இலாகா அலுவலர்கள் அந்த இளைஞரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
விசாரணையில், இவர் விமான நிலையத்தில் உள்ள தனியார் ஏஜென்சியில் கணினி பொறியாளராக பணியாற்றும் நிழல் ரவி (29) என தெரியவந்தது. நிழல் ரவி முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரை சோதனை செய்தபோது இரண்டு பொட்டலங்களில் 27 தங்க கட்டிகள் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
மேலும் விசாரணையில் துபாயில் இருந்து வந்த சென்னையை சேர்ந்த நியாமத்துல்லா ஹாதி (35) என்பவர் சுங்க சோதனை இல்லாமல் கடத்தல் தங்கத்தை வெளியே கொண்டு வந்து தர வேண்டும் என்று கூறி கழிவறையில் வைத்தாகவும் அதை தான் எடுத்து வெளியே செல்ல இருந்ததாகவும் கூறினார். இதையடுத்து பயணி நியாமத்துல்லா ஹாதியை சுங்க இலாகா அலுவலர்கள் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 66 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 200 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.
அதேபோல் துபாயில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் வந்த அப்துல் நசார் உள்பட ஐந்து பேரை பிடித்து விசாரித்தனர். உடமைகளில் எதுவுமில்லாததால் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தபோது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். ஐந்து பேர்களிடம் ரூ. 81 லட்சத்தி 35 ஆயிரம் மதிப்புள்ள ஒரு கிலோ 600 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.
ஒரே நாளில் நடத்திய சோதனையில் ஆறு பேரிடம் இருந்து ரூ.2 கோடியே 47 லட்சத்தி 35 ஆயிரம் மதிப்புள்ள 4 கிலோ 800 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கடத்தலுக்கு உதவிய தனியார் விமான நிறுவன என்ஜீனியர் நிழல் ரவி, தங்கம் கடத்தி வந்த நியாமத்துல்லா ஹாதி, அபதுல் நசார் ஆகிய 3 பேரை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.