திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த மகாலட்சுமி நகரில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சுற்றி வந்துள்ளார். பொதுமக்கள் அவரிடம் விசாரித்தபோது சரியான பதில் அளிக்காமல் அங்கிருந்து சென்றுள்ளார்.
இந்நிலையில், நேற்று (ஆக.14) வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அந்த நபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அப்போது அப்பெண் கூச்சலிட்ட சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் அந்த நபரை பிடித்து மரத்தில் கட்டி வைத்து, பல்லடம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், திருவண்ணாமலையைச் சேர்ந்த முரளி என்பதும், கட்டட பணிக்காக சில நாள்களுக்கு முன்பு பல்லடம் மகாலட்சுமி நகர் பகுதிக்கு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அந்த நபரை காவல் துறையினர் விசாரணைக்காக பல்லடம் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். பட்டப் பகலில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.