தமிழ்நாடு முழுவதும் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின்பேரில் சேலம் மாவட்டத்தில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகளை கண்காணித்து அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்கண்காணிப்பாளர் தீபா கனிகர் உத்தரவிட்டார்.
இதையடுத்து, குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த பழைய குற்றவாளிகள் பட்டியலில் உள்ளவர்களை, அவர்கள் வீடுகளுக்குச் சென்று தற்போதைய செயல்பாடு குறித்து விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட பிரபல ரவுடிகளான பூபதி, பிரசாத், கோபி, சசிகுமார், ஜெயராமன், ரத்தினவேல் ஆகிய 7 பேர் மீது காவல்துறையினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
இரண்டாவது நாளான திங்கள்கிழமையும் சோதனையில் நடத்தப்பட்டு 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், 6 பேரை கைது செய்து வருவாய் கோட்டாட்சியர் முன்பு ஆஜர்படுத்தினர். சேலம் மாவட்டம் முழுவதும் 45 பேரை காவல்துறையினர் கைது செய்து வருவாய் கோட்டாட்சியர் முன்பு ஆஜர்படுத்தி, அவர்களிடம் பிணைபத்திரம் எழுதி வாங்கியுள்ளனர். இது குறித்து மாவட்ட காவல்கண்காணிப்பாளர் தீபா கனிகர் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகள் மீது கைது நடவடிக்கை தொடரும் என தெரிவித்தார்.