சென்னை கீழ்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆண்ட்ரூஸ்(47) என்பவர் மயிலாப்பூரில் உள்ள ஆலிவர் சாலையில் அமைந்திருக்கும் வீட்டில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 24ஆம் தேதி ஆண்ட்ரூஸ் பணியிலிருந்த போது, இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 4 நபர்கள் செல்போனை பறித்துச் சென்றனர்.
இதனால் ஆண்ட்ரூஸ் அளித்த புகாரின் பேரில் மயிலாப்பூர் காவல் துறையினர் தனிப்படை அமைத்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளையர்கள் ஓட்டி சென்ற வாகன எண் பதிவாகி இருந்தது. அந்த இருசக்கர வாகனம் செல்லக்கூடிய அனைத்து இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தேடி வந்தனர்.
தொடர்ந்து டாக்டர் அம்பேத்கர் நகர் பாலம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட நபர்கள் வருவதை அறிந்த தனிப்படை காவலர்கள், வாகன தணிக்கையில் ஈடுபட்டு இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 2 சிறுவர்கள் உள்பட 4 பேரை கைது செய்தனர். இவர்கள் கே.கே நகரை சேர்ந்த நடராஜன்(22) மற்றும் கண்ணகி நகரை சேர்ந்த ஆகாஷ்(21) என்பது தெரியவந்தது.
இவர்களிடமிருந்து 7லட்சம் ரூபாய் மதிப்புள்ள 17 செல்போன்கள் மற்றும் 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் 4 பேரும் இணைந்து செம்மஞ்சேரி, துரைப்பாக்கம், கண்ணகி நகர், மயிலாப்பூர் போன்ற பகுதிகளில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. ஏற்கெனவே நடராஜன் மீது 10 வழக்குகள் நிலுவையில் இருப்பதும், 7 வழக்குகள் ஆகாஷ் மீதும் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தாறுமாறாக ஓடிய வேன் மோதி தூக்கி வீசப்பட்ட இளைஞர்!