சென்னை பட்டினப்பாக்கம் எஸ்.சி.பி. சாலையில் உள்ள சிக்னலில், தாறுமாறாக வந்த தண்ணீர் லாரி அங்கு நின்றுகொண்டிருந்த இரண்டு இருசக்கர வாகனத்தின் மீது மோதியதோடு சிக்னல் கம்பத்தின் மீது மோதியது.
இதில் தூக்கிவீசப்பட்ட நான்கு வயது சிறுவன் பிரணீஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 3 பேர் காயமடைந்தனர். காயமடைந்த மூன்று பேரும் மருத்துவனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக அடையாறு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் எண்ணூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திர பிரசாத்தின் மகன் பிரணீஷ் (4) என்பது தெரியவந்தது.
ராஜேந்திர பிரசாத்தின் தாய் உமாவின் மருத்துவச் சிகிச்சைக்காக உறவினர் கோபால் என்பவரது இருசக்கர வாகனத்தில் உமா, பிரணீஷ் தரமணி சென்றுகொண்டிருந்தபோது லாரி மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய லாரி ஓட்டுநரான பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த சமீர் (24) என்பவரைக் காவல் துறையினர் கைதுசெய்தனர். இவர் மீது 304(ஏ) என்ற பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சியில், லாரியை தாறுமாறாக இயக்கி சிக்னலில் நின்றுகொண்டிருந்த மூன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியதோடு, சிக்னல் கம்பத்தில் மோதியதும் பதிவாகியுள்ளது. லாரி பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்து மொபட் மீது மோதியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: மதுரையில் நீட் தேர்வு பயத்தால் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!