கடந்த மாதம் ஆர்.கே.நகர் பகுதிக்குட்பட்ட வினோபா நகர் மார்க்கெட் பகுதியில், செல்ஃபோன் கடை ஒன்றின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து ஆர்.கே.நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், ஐஓசி பேருந்து நிறுத்தம் அருகே காவலர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த மூன்று பேரை மறித்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சந்தேகத்தின் அடிப்படையில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்ததில், அவர்கள் எண்ணூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த சரத் என்ற பூச்சி சரத் (21), கௌரி சங்கர் (24), கொருக்குப்பேட்டை மேயர் பாசு தெருவை சேர்ந்த பாஸ்கர் என்ற பல்லு பாஸ்கர் (22) என்பது தெரியவந்தது.
இவர்கள் மூவரும் சேர்ந்தே, செல்ஃபோன் கடையை உடைத்து திருடியதும், காசிமேடு, புதுவண்ணாரப்பேட்டை பகுதிகளில் இரு சக்கர வாகனங்களை திருடியதும், அரசு மதுபானக்கடையை உடைத்து மதுபானங்களை திருடியதும், திருவொற்றியூர் நாய் கோட்ரஸ் பகுதியில் டீக்கடை ஒன்றை உடைத்து பீடி, சிகரெட் திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து, அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனம், 8 செல்ஃபோன்கள் ஆகியவற்றை ஆர்.கே. நகர் குற்றப்பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் மூவரையும் நீதிமன்ற காவலில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: திருட்டை தடுக்க பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா திருட்டு!