தந்தேவாடா: சத்தீஸ்கர் மாநிலத்தின் தந்தேவாடா மாவட்டத்தில் தொடர் கிளர்ச்சிகளில் ஈடுபட்டுவந்த 24 நக்ஸலைட்டுகள் போலீசில் சரணடைந்தனர். இவர்களில் 12 பேர் பெண்கள் ஆவார்கள்.
இது குறித்து தந்தேவாடா காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் பல்லவா கூறுகையில், “இவர்கள் தெற்கு பஸ்தார் பகுதிகளில் தீவிரமாக செயல்பட்டுவந்தவர்கள். குடியரசுத் தினத்தை முன்னிட்டு சரணடைந்துள்ளனர். இதில் மூவரின் தலைக்கு ரூ.1 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது. மீதமுள்ள 21 பேரும் மாவோ கொள்கையினால் ஈர்க்கப்பட்டு சிறிய சிறிய கிளர்ச்சிகளில் ஈடுபட்டுவந்தவர்கள்.
இந்நிலையில் மாவட்ட காவலர்கள் மேற்கொண்ட, “லான் வரட்டு (வீடு, கிராமம் திரும்புவோம்) என்ற பரப்புரையினால் ஈர்க்கப்பட்டு, வன்முறையை கைவிட்டு சரணடைந்துள்ளனர். இவர்களின் வாழ்வாதாரத்துக்காக முதல்கட்ட மனிதாபிமான உதவியாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.
லான் வரட்டு பரப்புரை நக்ஸல்கள் மனதில் நல்லெண்ணத்தை விதைக்கிறது. பலரும் ஆயுதப் போராட்டத்தை கைவிட முன்வந்துள்ளனர். இந்தப் பரப்புரை கடந்தாண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் இதுவரை 272 நக்ஸலைட்டுகள் சரணடைந்துள்ளனர்” என்றார்.
இதையும் படிங்க: நக்ஸல் உடையணிந்த விவசாயி கைது!