தென்காசி: நகர் பகுதிகளில் தொடர்ந்து அரங்கேறும் பகல் கொள்ளைச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் காவல் நிலையத்திற்குட்பட்ட மேலமெஞ்ஞானபுரம் பகுதியில் ரவீந்திரன் என்பவர் வசித்துவருகிறார். சித்த வைத்தியரான இவர் தனக்கு சொந்தமான அடுக்கு மாடி வீட்டை விற்பனை செய்யவுள்ளதாக கூறிவந்துள்ளார்.
இச்சூழலில் நேற்று பகல் நேரத்தில் காரில் வந்திறங்கிய அடையாளம் தெரியாத ஆறு பேர் வீட்டை விலைக்கு வாங்க வந்துள்ளதாக பேசிக்கொண்டே வீட்டினுள் நுழைந்துள்ளனர். வீட்டில் ரவீந்திரனின் தம்பி தனபாலனும், அவரது பிள்ளைகளும் இருந்துள்ளனர்.
யாரும் எதிர்பார்த்திராத வேளையில், அந்த ஆறு பேர் கொண்ட கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த கை துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி அவர்களை கட்டிப்போட்டு, 106 கிராம் தங்க நகைககளை கொள்ளையடித்து விட்டு, அவர்கள் வந்து சிவப்பு நிற காரில் தப்பிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த குற்றாலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதேபோன்று கடந்த வாரம் தென்காசி நகர் பகுதியில் தொழிலதிபர் வீட்டில் பட்டப்பகலில் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், அவரது மனைவியை கட்டிப்போட்டு 80 பவுன் நகையை கொள்ளை அடித்து சென்ற வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் காவல் துறையினர் திணறி வரும் சூழலில், அடுத்த கொள்ளை சம்பவம் நடந்திருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த இரண்டு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதும் ஒரே கும்பலாக இருக்கக்கூடும் என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணையை தீவிரபடுத்தியுள்ளனர்.