பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் அண்டை நாடான இலங்கைக்கு உதவ உலக வங்கி இம்முறை மறுத்துள்ளது.
இலங்கை மக்கள் மீதான நெருக்கடியின் தாக்கம் குறித்து கவலை கொண்டுள்ளதாகவும்; ஆனால் அரசாங்கம் தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்ளாத வரை நிதி வழங்கத் தயாராக இல்லை என்றும் உலக வங்கி கூறியுள்ளது.
உதவ வேண்டுமானால் பொருளாதார ஸ்திரத்தன்மையில் கவனம் செலுத்தும் ஆழமான கட்டமைப்பு சீர்திருத்தங்கள் தேவை; மேலும் இந்த நெருக்கடியை உருவாக்கிய அடிப்படை கட்டமைப்புக்காரணங்களை நிவர்த்தி செய்வதும் தேவைப்படுகிறது என உலக வங்கி தெரிவித்துள்ளது.
அவசரமாகத் தேவைப்படும் மருந்துகள், சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கு ஏற்கெனவே உள்ள கடனில் இருந்து 160 மில்லியன் டாலர்களை திருப்பிவிட்டதாக உலக வங்கி தனது அறிக்கையில் கூறி இருக்கிறது. இலங்கை தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் பிணை எடுப்புப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் இந்த நடவடிக்கைக்கு பல மாதங்கள் ஆகலாம் என அலுவலர்கள் கூறுகின்றனர்.
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (CCPI) தரவுகளின்படி, ஜூலை மாதத்தில் பணவீக்கம் 60.8 விழுக்காடாக அதிகரித்துள்ளது. அதேவேளையில் இலங்கை ரூபாயின் மதிப்பு இந்த ஆண்டு அமெரிக்க டாலருக்கு எதிராக பாதிக்கு மேல் இழந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்ட மதிப்பீட்டின்படி, ஒவ்வொரு ஆறு இலங்கை குடும்பங்களில் ஐந்து குடும்பங்கள் தரம் குறைந்த உணவை வாங்கவும், குறைவாக உண்ணவும் அல்லது சில சமயங்களில் உணவை முற்றிலுமாகத் தவிர்க்கவும் நிர்பந்திக்கப்பட்டுள்ளன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: 'நெருப்போடு விளையாடாதீர்கள்' - பைடனை எச்சரித்த சீன அதிபர் ஜி ஜின்பிங்!