வாஷிங்டன் : இந்தியா - அமெரிக்கா இடையிலான பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும், பகிரப்பட்ட முன்னுரிமைகளின் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் குவாட் போன்ற அமைப்புகளில் இந்தியாவுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்ற அமெரிக்கா திட்டமிட்டு உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரீன் ஜீன் பியர்,"இந்தியா - அமெரிக்கா இடையேயான பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும், இரு நாடுகளுக்கு இடையிலான பகிரப்பட்ட முன்னுரிமைகளின் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கும் குவாட் போன்ற அமைப்புகளில் இணைந்து பணியாற்ற திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்தார்.
அமெரிக்காவும், இந்தியாவும் வலுவான இருதரப்பு உறவைக் கொண்டு உள்ளதாகவும், அதில் வர்த்தகமும் அடங்கும் என்று வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்தியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய குவாட் அமைப்பு இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் உள்ள கடல் வழிகளில் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களை பேணுவதே முக்கிய குறிக்கோளாக கொண்டு தொடங்கப்பட்டது. முதலில் கடற்படை போர் பயிற்சியில் மட்டுமே நாடுகள் ஈடுபட்ட நிலையில், நாளடைவில் பொருளாதாரம் சார்ந்த செயல்களிலும் ஈடுபடத் தொடங்கின.
மலபார் போர் பயிற்சி என்ற பெயரில் 4 நாடுகளும் முதலில் பயிற்சியில் ஈடுபட்டு வந்தன. முன்னதாக அமெரிக்கா சென்ற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவும் அமெரிக்காவும் வலுவான, அமைதியான மற்றும் இணக்கமான உலகளாவிய சமூகத்திற்கான அடித்தளத்தை உருவாக்கி வருவதாக கூறினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு வலிமை மிகுந்த ஒன்றாக வளர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து நடத்திய நிகழ்ச்சியில் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராம்ன் இவ்வாறு கூறினார். முன்னதாக, அமெரிக்காவிற்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து கூறுகையில், அமெரிக்கா முழுவதும் உள்ள இந்திய சமூகத்தினர் இருதரப்பு வர்த்தக, பொருளாதார மற்றும் மக்களிடையேயான உறவுகளை மேம்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக கூறினார்.
இந்தியா சார்ந்த பல்வேறு பிரச்சினைகளுக்கு அண்மை காலமாக அமெரிக்கா குரல் கொடுத்து வருகிறது. இந்தியாவின் ஒன்றிணைந்த நில பரப்பான அருணாசல பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு புதிதாக பெயர் மாற்றம் செய்து அதை தெற்கு திபெத் என சீனா அறிவிப்பு வெளியிட்டது, இதற்கு அமெரிக்கா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
"சீனா மறுபெயரிட்டு உள்ள அருணாசல பிரதேசத்தின் 11 இடங்களும் இந்தியாவுக்கு சொந்தமானது. மேலும் உள்ளாட்சி அமைப்புகளின் பெயரை மாற்றுவதன் மூலம் பிராந்திய உரிமைகோரல்களை முன்னெடுப்பதற்கான சீனாவின் எந்தவொரு ஒருதலைப்பட்ச முயற்சியையும் அமெரிக்கா கடுமையாக எதிர்க்கிறது" என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரீன் ஜீன் பியர் தெரிவித்தார்.
இதையும் படிங்க : UNFPA: உலக மக்கள்தொகையில் நம்பர் ஒன்.. இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள்?