டெல்லி: அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் அடுத்த ஆண்டுடன் முடிவடைய உள்ள நிலையில், அங்கு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனே மீண்டும் போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மறுபுறம் பிரதான எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுவார் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், டொனால்ட் டிரம்பிற்கு போட்டியாக குடியரசுக் கட்சியைச்சேர்ந்த இந்திய வம்சாவளியான நிக்கி ஹாலே, அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தார். இந்நிலையில் மற்றொரு இந்திய வம்சாவளியரான விவேக் ராமசாமியும் அதிபர் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
பாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக விவேக் ராமசாமி தெரிவித்தார். 37 வயதான விவேக் ராமசாமியின் பெற்றோர் கேரள மாநிலம், பாலக்காடு அடுத்த வடக்கன்சேரியைச் சேர்ந்தவர்கள். இந்தியாவில் இளநிலைப் பட்டம் பெற்ற விவேக் ராமசாமியின் தந்தை, அமெரிக்கா சென்று பணியாற்றிய நிலையில் அங்கேயே செட்டிலாகி உள்ளார்.
விவேக் ராமசாமியின் தாயார் கீதா, அமெரிக்காவில் உள்ள முதியோர் மனநல மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் பிறந்த விவேக் ராமசாமி, ஒகியோ மாகாணத்தில் பால்ய பருவத்தைக் கழித்துள்ளார். ஒகியோ மற்றும் சின்சினாட்டி பகுதிகளில் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை விவேக் ராமசாமி நிறைவு செய்துள்ளார்.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இளங்கலை பயோலாஜி படிப்பை முடித்த விவேக் ராமசாமி, 2007-ம் ஆண்டு இளம் தொழில்முனைவோருடன் இணைந்து கேம்பஸ் வென்ச்சர் நெட்வொர்க் (Campus Venture Network) என்ற நிறுவனத்தை தொடங்கினார். அதன் பிறகு, 2010-2013 காலகட்டங்களில், யேல் சட்டப் பள்ளியில் (Yale Law School) சட்டப்படிப்பையும் படித்து முடித்துள்ளார்.
தொடர்ந்து 2014-ம் ஆண்டு Roivant Sciences என்ற மருந்து தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிய விவேக் ராமசாமி இந்த நிறுவனத்தின் மூலம் மருந்து வளர்ச்சியில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வந்தார். தொடர்ந்து குடியரசு கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட அவர், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளார்.
எழுத்தாளர் பணியையும் விட்டு வைக்காத விவேக் ராமசாமி ஒரு புத்தகத்தையும் எழுதியுள்ளார். அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூக நீதியின் பிரச்னைகளை அடிப்படையாகக் கொண்டு புத்தகத்தை எழுதி உள்ளார். தனது வேட்புமனு அடுத்த தலைமுறையின் கனவுகளுக்கான தயாரிப்பு என நம்புவதாக விவேக் ராமசாமி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இஸ்ரேலுக்கு புனிதப் பயணம் சென்ற 6 பேர் மாயம்?