காத்மண்டு : இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் அடுத்தடுத்து இரண்டு முறை நில நடுக்கம் ஏற்பட்டது. நில நடுக்கத்தால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேற்கு நேபாளத்தில் உள்ள சுர்கெட் மாவட்டத்தில் இரவில் 11: 58 மணிக்கு முதல் நில நடுக்கம் ஏற்பட்டது.
முதல் நில நடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 4 புள்ளி 8 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. வீடுகள் லேசாக குலுங்கியதால் மக்கள் அச்சத்திற்கு உள்ளாகினர். தொடர்ந்து நள்ளிரவு 1:30 மணி அளவில் மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது. இரண்டாவது நில நடுக்கம் சற்று வீரியத்துடன் 5 புள்ளி 9 என்ற ரிக்டர் அளவில் பதிவானதாக தேசிய நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது.
இரண்டாவது நில நடுக்கம் பஜூராஸ் டாக்கோட் பகுதியில் உணரப்பட்டதாக கூறப்பட்டு உள்ளது. நில நடுக்கத்தை தொடர்ந்து வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். நில நடுக்கத்தால் பஜூரா நகர சாலைகள் குலுங்கியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து உள்ளனர்.
நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிளைவுகள் குறித்து ஆய்வு நடத்தி வருவதாகவும் தற்போது வரை எந்த உயிர் சேதமோ பெரிய அளவில் பொருட் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை என மீட்பு குழு அதிகாரிகள் மற்றும் போலீசார் தெரிவித்தனர். மேற்கு நேபாளம் பகுதியில் கடந்த சில நாட்களாக அதிகளவிலான நில நடுக்கங்கள் பதிவாவதாக கூறப்படுகிறது.
கடந்த முறை மேற்கு நேபாளத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் 6 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மலைப் பாங்கான மாவட்டமான பாஜூராஸ் தலைநகர் காத்மண்டுவை விட 850 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதனால் தலைநகரில் நில நடுக்கத்தின் உணர்ச்சி காணப்படவில்லை எனக் கூறப்பட்டு உள்ளது.
நேபாளத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் நேபாளத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் உருக்குலைந்தன. நேபாள வரலாற்றில் மிக மோசமன இயற்கை சேதங்களில் ஒன்றாக இந்த நில நடுக்கம் கூறப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தில் 8 ஆயிரத்து 694 பேர் உயிரிழந்தனர். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என ஏறத்தாழ 21 ஆயிரம் பேர் இந்த நிலநடுக்கத்தால் காயம் அடைந்தனர். இந்த நில நடுக்கத்தின் ஆறாத வடு இன்னும் மக்கள் மனதை விட்டு நீங்காத நிலையில் அதே ஏப்ரல் மாதம் மீண்டும் நில் நடுக்கம் ஏற்பட்டு இருப்பது மக்களை மேலும் பீதிக்குள்ளாக்கி உள்ளது.
இதையும் படிங்க : Karnataka elections 2023: திமுகவை பாலோ பண்ணும் காங்கிரஸ்! ராகுல் காந்தி பளீச் வாக்குறுதி!