அமெரிக்கா: உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான டெஸ்லா நிறுவன தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க், சமூக வலைதளமான ட்விட்டரை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்குவதாக கடந்த மாதம் அறிவித்திருந்தார். ட்விட்டர் நிர்வாகக் குழு மற்றும் மஸ்க் தரப்பில் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த ஒப்பந்தம் உறுதியானதாக தகவல்கள் வெளியாகின.
இதைத் தொடர்ந்து ஸ்பேம் மற்றும் போலிக்கணக்குகள் குறித்த தகவல்களை தர ட்விட்டர் நிறுவனம் மறுப்பதாக மஸ்க் குற்றஞ்சாட்டினார். இந்த தகவல்களை தரவில்லை என்றால், ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தில் இருந்து விலக நேரிடும் என்றும் எச்சரித்திருந்தார். அதன்படி, ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக ஜூலை 8ஆம் தேதி எலான் மஸ்க் அறிவித்தார்.
இந்நிலையில், எலான் மஸ்க்கிற்கு எதிராக ட்விட்டர் நிறுவனம் டெலாவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. எலான் மஸ்க் ஒப்பந்த நிபந்தனைகளை மீறி நடந்து கொண்டதாகவும், அவரது நடவடிக்கையால் ட்விட்டருக்கு ஏராளமான இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், ட்விட்டர் நிறுவனத்தின் வழக்கை கேலி செய்யும் விதமாக, எலான் மஸ்க் ட்விட்டரிலேயே ட்விட்டரை கலாய்த்து ட்வீட் செய்துள்ளார்.