ஜம்மு காஷ்மீர்: பிகாரைச் சேர்ந்த முஹம்மது அம்ரேஸ் என்ற தொழிலாளி ஆக.11 ஆம் தேதி இரவில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மூன்று தீவிரவாதிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பந்திபோரா மூத்த காவல் கண்காணிப்பாளர் முஹம்மது ஜாஹித் தெரிவித்தார்.
மேலும், விசாரணையில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்த பல்வேறு நபர்களிடம் தொழில்நுட்ப உதவிகள் மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தொழிலாளியை கொன்ற தீவிரவாதிகளான வசீம் அக்ரம், யாவர் ரியாஸ் மற்றும் முஸாமில் ஷேக் மூவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மூவரும் சௌத்னாரா சோனாவாரியில் வசிப்பவர்கள் என்றும், இவர்கள் மூவரும் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் செயல்படுத்தும் பாபருடன் தொடர்பில் இருந்ததும் விசாரணையில் கண்டறியப்பட்டது.
விசாரணையில், அவர்களது தலைவர் பாபர், வெளியூரை சேர்ந்த தொழிலாளியை கொல்வதன் மூலம், அங்கு இருக்கும் மற்ற வெளியூர் தொழிலாளர்களுக்கு பெரும் பயம் ஏற்படும் என கூறினார். அதன்படியே நாங்கள் செய்தோம் என அதிர்ச்சியளிக்கும் வகையில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
தீவிரவாதிகளிடம் இருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் ஒரு மேகசீன் மற்றும் நான்கு தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக எஸ்.எஸ்.பி தெரிவித்தார்.
இதையும் படிங்க: பள்ளிவாசலுக்கு அருகே வைக்கப்பட்ட பிரதமர் மோடியின் பேனர் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு...!