லண்டன்: மழைக்காலங்கள் மற்றும் குளிர்காலங்களில் வைரஸ் காய்ச்சல் ஏற்படுவது வழக்கம். ஆனால், ஒரு முறை வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுவிட்டாலே நமது உடல் ஒரு வழியாகிவிடும். அப்படியிருக்கையில் இரண்டு வைரஸ் ஒரே நேரத்தில் தாக்கினால் என்னவாகும்?. உண்மையில் அப்படி நடந்தால் நமது நோய் எதிர்ப்பு அமைப்பில் மோசமான பாதிப்பு ஏற்படும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
குளிர்காலத்தில் பரவும் இன்ஃப்ளூயன்ஸா-ஏ மற்றும் ஆர்எஸ்வி (Respiratory Syncytial Virus) வைரஸ் இரண்டும் ஒரே நேரத்தில் தாக்கினால், உடலில் என்னென்ன தாக்கங்கள் ஏற்படும் என்று கிளாஸ்கோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.
இவை இரண்டும் ஒரே நேரத்தில் ரத்தத்தில் கலப்பதால் புதிய ஹைபிரிட் வைரஸ் துகள்கள் உருவாவதாகவும், அதில் இன்ஃப்ளூயன்ஸா-ஏ மற்றும் ஆர்எஸ்வி வைரஸ்களின் மரபணுக்கள் இருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய வைரஸ் மிகவும் வீரியம் மிக்கது என்றும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ஆராய்ச்சியாளர் ஜோனா ஹேன் கூறுகையில், "இந்த ஹைபிரிட் வைரஸ் துகள்கள் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை குலைக்கும் ஆற்றல் கொண்டது. இந்த வைரஸ் துகள்களால், இன்ஃப்ளூயன்ஸா-ஏ வைரஸ் ஊடுருவ முடியாத ஆரோக்கியமான செல்களிலும் ஊடுருவ முடியும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: குடல் ஆரோக்கியத்திற்கு தினம் ஒரு கை பாதாம்...!