கொழும்பு: இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் அதிரடியாக புகுந்து மாளிகையை கைப்பற்றினர்.
அதிபர் மாளிகையில் உள்ள நீச்சல் குளத்தில் குளிக்கும் காட்சிகள், கேரம் போர்டு விளையாடுவது, சோபாவில் படுத்து உறங்குவது, பிரம்மாண்ட பாத்திரத்தில் இரவு உணவு தயாரிப்பது போன்ற காட்சிகளும் வெளியானது. மக்கள் ஒன்று திரண்டு வந்ததால், அதிபர் கோத்தபய மாளிகையை காலி செய்துவிட்டு தப்பி ஓடினார்.
மேலும், அதிபர் ராஜபக்சேவின் சகோதரும், முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்சே நாட்டில் இருந்து வெளியேற இருந்தபோது, கொழும்பு விமான நிலையத்தில் போராட்டக்காரர்களால் நேற்று நள்ளிரவு (ஜூலை 12) தடுத்து நிறுத்தப்பட்டார்.
கோத்தபய ராஜபக்சே தனது அதிபர் பதவியை ஜூலை 13ஆம் தேதி அன்று ராஜினாமா செய்வதாக முன்னர் அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, ராஜினாமா கடிதத்தில் நேற்று முன்தினம் (ஜூலை 12) அவர் கையெழுத்திட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அவர் அதிபர் மாளிகையில் இருந்து வெளியேறிய பின்னர், அமெரிக்காவுக்கு தப்பிச் செல்ல இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று (ஜூலை 13) இலங்கையில் இருந்து வெளியேறிவிட்டதாக குடியேற்ற அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
கோத்தபய ராஜபக்சே, அவரது மனைவி, அவரது பாதுகாவலர் உள்பட 4 பயணிகளுடன் அன்டோநோவ்-32 எனும் ராணுவ விமானத்தில் மாலத்தீவுக்கு சென்றுவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
இதைத்தொடர்ந்து, அவர் கையெழுத்திட்ட ராஜினாமா கடிதம் இன்று நாடாளுமன்ற சபாநாயகரிடம் ஒப்படைக்கப்படும். பின்னர், அதிகாரப்பூர்வமாக ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன், அந்நாட்டின் சட்டத்தின்படி பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தற்காலிக அதிபராக இன்றே பொறுப்பேற்றுக்கொள்வார் எனத் தெரிகிறது.
மேலும், வரும் ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்றத்தில் புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும், ஜூலை 19ஆம் தேதி அதிபர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அனைத்து கட்சி பிரதிநிதிகள் அடங்கிய அரசு நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்கும்பட்சத்தில், தான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்து அதற்கு வழிவிட தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்திருந்தது நினைவுக்கூரத்தக்கது.
இதையும் படிங்க: Exclusive: “இலங்கையின் தற்போதைய நெருக்கடி உள்நாட்டுப் போரை விட மோசமானது ”- இலங்கை கப்பல் நிறுவன முன்னாள் தலைவர்