ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் அமைந்துள்ள சால்டோ டி காஸ்ட்ரா என்ற ஒரு சிறிய கிராமம் ரூ.2 கோடிக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாக இணையதளங்களில் விளம்பரம் செய்யப்பட்டுவருவது அனைவரின் கவனத்தையும் திருப்பியுள்ளது.
ஸ்பெயின் நாட்டில் புழக்கத்தில் உள்ள சொத்து விற்பனை தொடர்பான இணையதளமான ஐடியலிஸ்டாவில் 2,27,000 யூரோக்களுக்கு (சுமார் ரூ. 2 கோடியே 16 லட்சம்) இந்த கிராமத்தை வாங்கலாம் என அக்கிராமத்தின் உரிமையாளர் விளம்பரம் செய்துள்ளார். மேலும் அக்கிராமத்தில் 44 வீடுகள், ஒரு ஹோட்டல், ஒரு தேவாலயம், ஒரு பள்ளி, ஒரு நீச்சல் குளம் மற்றும் ஒரு பாராக்ஸ் கட்டடம் ஆகியவற்றைக் கொண்டு சிறந்த சுற்றுலா தலமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாட்ரிட் நகரில் இருந்து சிலமணி நேரங்களில் செல்லக் கூடிய இக்கிராமத்தைப் பல ஆண்டுகளுக்கு முன் சுற்றுலாத் தலமாக மாற்ற வாங்கியதாக கூறப்படுகிறது. இருப்பினும் பணிகளை சரிவர முடிக்க முடியாததால் அதன் உரிமையாளர் விற்கும் முடிவு எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
1950ஆம் ஆண்டுகளில் மின் உற்பத்தி நிறுவனம் சால்டோ டி காஸ்ட்ரோவில் நீர்த்தேக்கத்தை கட்டும் ஊழியர்களுக்கு வீட்டுவசதி செய்து வந்தது. ஆனால், இத்திட்டம் நிறைவடைந்த பின்னர் கிராமமே வெறிச்சோடி போனது.
கிராமத்தை விற்பதற்கான காரணம் குறித்து, உரிமையாளர் ரோமுவால்ட் ரோட்ரிக்ஸ், "நான் நகர்ப்புறவாசி என்பதால் இக்கிராமத்தை கவனிக்க முடியாது என்பதால் நான் விற்கிறேன்" எனக் கூறினார்.
இதற்கிடையில் அந்த விற்பனை வலைத்தளத்தில் பிரிட்டன், பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட அமைப்புகள் கிராமத்தை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றன.
இதையும் படிங்க:குடியுரிமை பெற்ற இந்தியர்கள் ராணுவத்தில் சேரலாம் - கனடா அறிவிப்பு