சான் பிரான்சிஸ்கோ : கரோனா கட்டுப்பாடுகள் தளர்வானது முதலே உலக நாடுகள் பெரும் பொருளாதார இழப்புகளைச் சந்தித்து வருகிறது. மென்பொருள் தொடங்கி பல்வேறு துறைகளில் கோலோச்சி வரும் நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் தவித்து வருகிறது.
நிதி நிலையை ஸ்திரத்தன்மைக்கு, பெரு நிறுவனங்கள் முதல் சிறு தொழில்கள் வரை கையாண்ட முதல் வேலை பணி நீக்கம். கரோனாவுக்குப் பிந்தைய பணியாளர்கள் நீக்க கலாசாரத்தை முதன் முதலில் ட்விட்டர் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. ட்விட்டர் நிறுவனத்தை விலை கொடுத்து வாங்கியது முதலே, 50 சதவீதத்திற்கும் அதிகமான பணியாளர்களை நீக்கி எலான் மஸ்க் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
அவரைத் தொடர்து ஃபேஸ்புக், அமேசான், கூகுள், உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களும் பணியாளர்கள் நீக்க அடையாளத்தை கையில் எடுத்து, தங்களை நிலை நிறுத்துக் கொள்ள முயற்சித்தன. கரோனா கட்டுப்பாடுகளால் மென்பொருள் உள்ளிட்ட துறைகளைக் காட்டிலும் சினிமா, சுற்றுலா, கேளிக்கை, பொழுது போக்கு உள்ளிட்ட துறைகள் அதள பாதாளத்திற்குச் சென்றன.
இந்நிலையில், திரைப்படத் துறை, பொழுதுபோக்கு, கேளிக்கைத் துறைகளில் பிரபலமாக விளங்கும் டிஸ்னி நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கையை மீண்டும் கையில் எடுத்து உள்ளது. 3வது முறையாக ஆட்குறைப்பு பணியில் இறங்கி உள்ள டிஸ்னி நிறுவனம் இந்த முறை 2 ஆயிரத்து 500 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
கரோனா கட்டுப்பாடுகள் தளர்வுகளுக்குப் பின்னரும் பூங்கா, ரிசார்ட் உள்ளிட்ட பிரிவுகள் இயல்பு நிலைக்குத் திரும்பாத காரணத்தினால், இந்தப் பணியாளர் குறைப்பு நடவடிக்கையை கையில் எடுத்து உள்ளதாக டிஸ்னி நிறுவனம் தெரிவித்து உள்ளது. அதேநேரம் டெலிவிசன் துறையில் போதிய வளர்ச்சி ஏற்படாத நிலையில் அந்த துறையில் 2வது முறையாக பணியாளர் குறைப்பு செய்ய டிஸ்னி நிறுவனம் திட்டமிட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு முன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பணியாளர் குறைப்பு நடவடிக்கையில் டிஸ்னி நிறுவனம் ஈடுபட்டது. ஏறத்தாழ 7 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் 4 ஆயிரம் ஊழியர்கள் டிஸ்னி நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், 3வது கட்டமாக 2 ஆயிரத்து 500 ஊழியர்களை வேலையை விட்டு நிறுத்த டிஸ்னி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பாப் இகர் திட்டமிட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மீடியா துறைகளில் நாளுக்கு நாள் பெருகி வரும் போட்டி, மற்றும் முதலீட்டு பிரச்னைகள் காரணமாக இந்தப் பணி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த 2 ஆயிரத்து 500 பணியாளர்கள் நீக்கம் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : ரூ.2 ஆயிரம் நோட்டுக்களை இன்று முதல் வங்கிகளில் மாற்றலாம்! வழிமுறைகள் என்னென்ன?