சண்டிகர்: 424 விஐபிக்களுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு ஏன் திரும்பப் பெறப்பட்டது என்ற சர்ச்சையில் பஞ்சாப் அரசு சிக்கியுள்ளது. அண்மையில் பஞ்சாப் அரசு மத, அரசியல் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் என மொத்தம் 424 விஐபிக்களுக்கு அளித்து வந்த பாதுகாப்பை விலக்கிக்கொண்டது அல்லது பாதுகாப்பை குறைத்துக்கொண்டது.
இது நடந்த 24 மணி நேரத்திற்குள் பிரபல பாப் பாடகர் சித்து மூஸ்வாலா சுட்டுக் படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் விஐபிக்களுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை விலக்கி கொண்டது தொடர்பாக பஞ்சாப், ஹரியானா மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த உயர் நீதிமன்றம் எந்த அடிப்படையில் பாதுகாப்பை வாபஸ் பெறுவது என்ற முடிவு எடுக்கப்பட்டது என்றும், பாதுகாப்பு குறைக்கப்பட்ட 424 விஐபிக்களின் பட்டியல் எப்படி பகிரங்கப்படுத்தப்பட்டது என்றும் கேள்வி எழுப்பியது.
மேலும் சித்து மூஸ்வாலா கொலை குறித்து கவலை தெரிவித்த உயர் நீதிமன்றம், பாதுகாப்பு வாபஸ் பெறப்படும் போது ஒவ்வொரு நபரின் முழுத் தகவல்களும் சேகரிக்கப்படுகிறதா என்று பஞ்சாப் அரசுக்கு கேள்வி எழுப்பியது. அடுத்த விசாரணையில் அரசு உரிய விளக்கங்களை சமர்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.
இதையும் படிங்க: விடைபெற்றார் பாடகர் சித்து மூஸ்வாலா