ரஷ்யா: நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, சந்திரயான்-3 விண்கலத்தை வடிவமைத்தது. சுமார் 615 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்த விண்கலம், கடந்த ஜூலை 14ஆம் தேதி, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. எல்விஎம்-3 எம்-4 ராக்கெட் மூலம் இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
பல்வேறு கட்டப் பயணங்களுக்குப் பின்னர், இந்த விண்கலம் கடந்த 5ஆம் தேதி நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழைந்தது. நிலவை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த சந்திரயான்-3 விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட கேமரா நிலவை மிகவும் அருகில் படம் பிடித்து அனுப்பியது. இந்த சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் வரும் 23ஆம் தேதி தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக "லூனா-25" (Luna-25) என்ற விண்கலத்தை ரஷ்யா இன்று(ஆகஸ்ட் 11) விண்ணில் ஏவியுள்ளது. மாஸ்கோவின் கிழக்கே உள்ள வோஸ்டோச்னி ஏவுதளத்திலிருந்து இன்று அதிகாலையில் சோயுஸ் 2.1 பி என்ற ராக்கெட் மூலம் இந்த விண்கலம் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இது, 5.5 நாட்கள் பயணம் செய்து நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடையும் என்றும், பிறகு 5 முதல் 7 நாட்கள் சுற்றுவட்டப் பாதையில் பயணம் செய்து நிலவில் தரையிறங்கும் என்றும் ரஷ்ய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 50 ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்யா நிலவுக்கு லூனா-25 விண்கலத்தை அனுப்பியுள்ளது.
இந்த லூனா-25, வரும் 23ஆம் தேதி நிலவில் தரையிறங்க வாய்ப்புள்ளதாக ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் (Roscosmos) தெரிவித்துள்ளது. லூனா-25, சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கும் அதே நாளில் நிலவில் தரையிறங்கினாலும், சந்திரயான்-3 விண்கலத்திற்கு முன்பாக தரையிறங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதில், ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் குறிப்பிட்ட நேரத்தில் நிலவில் தரையிறங்கினால், நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் விண்கலம் என்ற பெருமையை அடையும்.
நிலவின் தென் துருவ ஆராய்ச்சி குறித்து வானியலாளர் ப்ளூமர் கூறுகையில், "நிலவின் தென் துருவப் பகுதி மிகவும் ஆச்சரியமூட்டும் ஒன்று. அங்கு தண்ணீர் இருப்பதாக ஆய்வாளர்கள் கணிக்கிறார்கள். நிலவின் தென் துருவத்தில் இருக்கும் பாறைகளில் உள்ள நீரால் பல்வேறு பயன்பாடுகள் இருப்பதாக கூறுகின்றனர்.
மேலும், நிலவின் தென் துருவம் இதுவரை யாராலும் தொடப்படவில்லை. தென் துருவத்தை ஆய்வு செய்வதன் மூலம் நிலவைப் பற்றி முழுமையாக ஆய்வு செய்ய முடியும். லூனா-25 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் உள்ள பாறை மற்றும் தூசிகளின் மாதிரிகளை சேகரிக்க உள்ளது. நிலவின் சூழலைப் புரிந்துகொள்வதற்கு இந்த மாதிரிகள் மிகவும் முக்கியம்" என்று கூறினார்.
நிலவை ஆய்வு செய்ய வேண்டும் என்பது ரஷ்யாவின் பிரதான குறிக்கோள் இல்லை என்றும், விண்வெளி ஆராய்ச்சியில் சீனா, அமெரிக்காவை விட நிபுணத்துவம் கொண்ட நாடாக ரஷ்யா திகழ வேண்டும் என்பதற்காகவே இந்த திட்டம் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையில், லூனா-25 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்காக, ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸுக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வாழ்த்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "லூனா-25 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய ரோஸ்கோஸ்மோஸுக்கு வாழ்த்துக்கள். நமது விண்வெளிப் பயணத்தில் மற்றொரு சந்திப்பு நிகழ்வது மிகவும் அற்புதமானது. சந்திரயான்-3 மற்றும் லூனா-25 இரண்டும் அவற்றின் இலக்குகளை அடைய வாழ்த்துகள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நிலவை நெருங்கும் சந்திரயான் 3 விண்கலம்... இஸ்ரோ கொடுத்த நல்ல சேதி!