துருக்கி: துருக்கியில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்ட நிலையில் தொடர் மீட்பு பணி நடைபெற்று வருகிறது. கிழக்கு துருக்கியில் உள்ள காசியான்டேப் நகரில் பூமிக்கு அடியில் 11 மைல் தொலைவில் நில நடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும். சரியாக அதிகாலை 4.17 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்டத்தில் இருந்து சரியாக 15 நிமிடங்கள் இடைவெளியில் மற்றொரு சக்திவாய்ந்த நிலநடுக்கமும் ஏற்பட்டதாகவும், அது 6.7 ரிக்டர் என்ற அளவில் பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காசியான்டேப் நகரம், சிரியா எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் நில நடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலநடுக்கத்தால் மலத்யா மாகாணத்தின் தியார்பகில் மற்றும் மலத்யாவில் உள்ள பல்வேறு கட்டடங்கள் சீட்டு கட்டுபோல் இடிந்து விழுந்தன. மலத்யா மாகாணத்தில் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட வானுயர் கட்டடங்கள் இடிந்து விழுந்து நொறுங்கியதாக கூறப்படுகிறது. இடிபாடுகளுக்குள் சிக்கிக் கிடப்பவர்களை மீட்கும் பணியில் பாதுகாப்பு படை வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
துருக்கியை போல் சிரியாவிலும் நில நடுக்கத்தின் பாதிப்பு அதிகளவில் உணரப்பட்டுள்ளன. ஏறத்தாழ 600 பேரின் சடலங்கள் கைப்பற்றப்பட்டு உள்ள நிலையில், தோண்ட தோண்ட கட்டட இடிபாடுகளில் இருந்து சடலங்கள் கைப்பற்றப்படுவதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டு உள்ளது.
வரலாறு காணாத வகையில் ஏற்பட்டுள்ள பேரிடரால் பல்வேறு நகரங்கள் உருக்குலைந்தன. மேலும் மீட்பு பணிகளில் ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டு உள்ளதாகவும், இடிபாடுகளில் சிக்கி உயிர் தப்பிய மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாவும் கூறப்பட்டுள்ளது.
சிரியாவில் உள்ள ஹாமாஸ் மற்றும் டமாஸ்கஸ், அலெப்போவிலின் வடக்கு நகரம் மற்றும் மத்திய நகரம் உள்ளிட்ட இடங்களில் நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் உயிரை தற்காத்துக் கொள்ள சாலைகளில் தஞ்சமடைந்தனர். லெபனானில் 40 விநாடிகள் நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படும் நிலையில், வீடுகளில் இருந்த பொருட்கள் அதிர்வின் காரணமாக விழுந்து நொறுங்கின.
இதையும் படிங்க: " தி ஹார்வர்டு லா ரிவ்யூ" பத்திரிக்கையின் தலைவரான இந்திய வம்சாவளி!