ஜெர்மனி: ஜெர்மனியில் ஜி7 உச்சி மாநாடு கடந்த 26ஆம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம்(ஜூன் 26) ஜெர்மனி சென்றார். முதல் நாளில் இந்திய வம்சாவளியினரை சந்தித்து பேசினார். இரண்டாவது நாளான நேற்று(ஜூன் 27) நடைபெற்ற பருவநிலை மாறுபாடு, எரிசக்தி, சுகாதாரம் தொடர்பான அமர்விலும் - உணவுப் பாதுகாப்பு, பாலின சமநிலை குறித்த அமர்விலும் பங்கேற்றார்.
இந்த அமர்வுகளில் பிரதமர் மோடி பேசுகையில், "இந்தியாவில் மக்கள் தொகை அதிகமாக இருந்தபோதும், கரியமில வாயு வெளியேற்றத்தில் இந்தியாவின் பங்கு 5 சதவீதம் மட்டுமே உள்ளது. வளரும் நாடுகள் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று குற்றம் சாட்டப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கையை பேணிப் பாதுகாத்து வருகிறோம். தற்போது அதை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், அனைத்து வீடுகளுக்கும் சமையல் எரிவாயு அடுப்பு வழங்கப்பட்டுள்ளது. மின்சாரத்தை சேமிக்க எல்இடி விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் இந்தியா முன்னோடியாக இருக்கும்" என்று கூறினார்.
இந்த மாநாட்டின்போது ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கால்ஸ், இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உக்ரைன் விவகாரம், பருவநிலை மாறுபாடு, எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பின் போது, இந்தியாவின் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையில், பல்வேறு பரிசுப் பொருட்களை ஜி7 நாடுகளின் தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். கைத்தறி கம்பளி, சிற்ப வேலைப்பாடுகள் செய்யப்பட்ட உலோக குவளை, கருநிற மண்பாண்டங்கள், டோக்ரா கலைப் பொருட்கள், டீ செட் உள்ளிட்ட பல்வேறு கைவினைப் பொருட்களை வழங்கினார். இந்த கைவினைப் பொருட்களில் பெரும்பாலானவை உத்தரபிரதேசத்தின் "ஒரு மாவட்டம், ஒரு உற்பத்தி பொருள்" திட்டத்துடன் தொடர்புடையவை என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: Video; மோடியைத் தேடி ஓடி வந்த அமெரிக்க அதிபர் பைடன்