மார்சில்: 33-வது ஒலிம்பிக் போட்டி ஒலிம்பிக் போட்டி, பிரான்ஸ் தலைநகர் பாரிசில் வருகிற 2024 ஆம் ஆண்டு ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெற திட்டமிடப்பட்டு உள்ளது. முன்னதாக 1900 மற்றும் 1924 ஆகிய இரு ஆண்டுகள் மட்டுமே நடத்தப்பட்டிருந்தது. ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாரிசில் ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது.
நூற்றாண்டு கடந்து மீண்டும் பாரீசில் ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளதால் பிரம்மாண்ட ஏற்பாடுகளை பிரான்ஸ் அரசு மேற்கொண்டு உள்ளது. இந்த நிலையில் பாரிசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கான ஜோதி, 2024 ஏப்ரலில் பிரான்ஸில் உள்ள மார்சில் நகரில் இருந்து தொடங்கும் என ஒலிம்பிக் தரப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் தீபத்தை கடல் மார்க்கமாக கொண்டு வர பிரான்ஸ் ஒலிம்பிக் கமிட்டி ஏற்பாடு செய்து வருகிறது. வழக்கமாக, ஒலிம்பிக் போட்டி தோன்றிய இடமான கிரீஸ் தலைநகர் ஏதென்சில் பாரம்பரிய முறைப்படி ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு, அங்கு தொடர் ஓட்டமாக எடுத்து செல்லப்படும்.
பிறகு ஒலிம்பிக் தீபம், போட்டி நடைபெறும் நாட்டிற்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்படும். ஆனால் பாரீஸ் ஒலிம்பிக்கில் வித்தியாசமான முயற்சியாக ஏதென்சில் ஏற்றப்படும் ஒலிம்பிக் தீபம் கப்பலில் எடுத்து வரப்பட்டு பிரான்சின் துறைமுக நகரான மார்செலியை வந்தடையும்.
அங்கிருந்து தீபம் தொடர் ஓட்டமாக கொண்டு செல்லப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒலிம்பிக் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்க இருப்பதாக பிரான்ஸ் ஒலிம்பிக் கமிட்டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஊக்கமருந்து விவகாரம்: ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகருக்கு தடை!