சியோல் : நடப்பாண்டின் முதல் ஏவுகணை சோதனையை வட கொரியா மேற்கொண்டு உள்ளதாக தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் தெரிவித்து உள்ளன. ஆண்டின் இறுதியில் தென் கொரியா மற்றும் அமெரிக்காவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வட கொரியாவின் இந்த ஏவுகணை சோதனைகள் கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வடகொரியா செலுத்திய ஏவுகணை பசிபிக் கடற்பகுதியில் வந்து விழுந்ததாக தென் கொரியா தெரிவித்து உள்ளது. அதேபோல் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகமும் அதன் கடற்பரப்பில் வடகொரியா ஏவுகணை வந்து விழுந்ததற்கான சாத்தியக் கூறுகளை கண்டறிந்ததாக தெரிவித்து உள்ளது.
2024ஆம் ஆண்டு முதல் முறையாக வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன் கடந்த டிசம்பர் 18ஆம் தேதி பொதுவெளியில் வைத்து வடகொரியா ஹவுசாங் 18 வகை கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்குதல் நடத்தும் ஏவுகணை சோதனையை நடத்தியது.
அமெரிக்காவின் மெயின்லேண்ட் மாகாணத்தை குறிவைத்து தாக்கும் வகையில் இந்த ஏவுகணை நவீன தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக ஞாயிற்றுக்கிழமை தென் கொரிய கடல் எல்லை பகுதியில் சிறிய ரக வெடிகுண்டுகளை சோதித்து பார்த்தது.
இருப்பினும், சோதனை நடத்தப்பட்ட அதே பகுதியில் தென் கொரிய ராணுவமும் போர் பயிற்சியில் ஈடுபட்டதால் அந்த இடமே போர்க் களம் போல் பரபரப்பாக காணப்பட்டது. ஏப்ரல் மாதத்தில் தென் கொரியா நாடாளுமன்ற தேர்தல் மற்றும் வரும் நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த சுழலை தனக்கு சாதகமாக பயன்படுத்து வடகொரியா தொடர் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு அச்சுறுத்தி வருகிறது.
இதையும் படிங்க : பாரத் ஜோடோ நியாய யாத்திரா : ராகுல் காந்தி எங்கெல்லாம் எவ்வளவு நாட்கள் பயணம்? முழு தகவல் இங்கே!