கலிபோர்னியா: உக்ரைன் ரஷ்யா போர் குறித்து தவறான தகவல்களை பரப்பிய ஆயிரக்கணக்கான முகநூல் கணக்குகள் முடக்கப்பட்டதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரிட்டனின் தி கார்டியன், ஜெர்மனியின் டெர் ஸ்பீகல் உள்ளிட்ட பிரபல செய்தி நிறுவனங்களின் பெயர்களில் போலி சமூக வலைதள கணக்குகளை உருவாக்கி, உக்ரைன் குறித்து அவதூறு பரப்பும் வகையில், ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் பல்வேறு பதிவுகள் போடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பதிவுகள் அதிகம் பேர் பார்ப்பதற்கு முன்பே கண்டுபிடித்து அழிக்கப்பட்டதாகவும், அந்த தளங்கள் முடக்கப்பட்டதாகவும் மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்து, உக்ரைன் ஆகிய நாடுகளில் இருந்து இந்த முகநூல் கணக்குகள் செயல்பட்டதாகவும், சுமார் 1,600 போலி முகநூல் கணக்குகள் இந்த போலி செய்திகள் பரப்புரைக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன்-ரஷ்யா போர் தொடங்கியதிலிருந்து போலி செய்திகள் பரப்பியதாக முடக்கப்பட்ட மிகப்பெரிய சமூக வலைதள நெட்வொர்க் இதுதான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனுக்கான சர்வதேச நாடுகளின் ஆதரவை பலவீனப்படுத்துவதற்காகவே இதுபோன்ற அவதூறு பரப்பும் நடவடிக்கைகளில் ரஷ்யா ஈடுபட்டு வருவதாகவும் மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.