சியோல் (வட கொரியா): கடந்த வாரம் தன் மகளை வெளியுலகிற்கு முதல் முறையாக அறிமுகப்படுத்திய வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், தற்போது 2-வது முறையாக மீண்டும் மகளுடன் பொது வெளியில் தோன்றியுள்ளார். உலகின் அணுசக்தி வல்லரசாக வட கொரியாவை மாற்ற அதிபர் கிம் ஜாங் உன் இலக்கு நிர்ணயித்துள்ளார்.
கடந்த வாரம் நடந்த கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் பாலிஸ்டிக் வகை ஏவுகணை Hwasong-17 ICBM-யின் காட்சியில் கிம் ஜாங் உன், தனது 2-வது மகள் ஜூ அய்-யுடன் கலந்து கொண்டு முதல் முறையாக உலகிற்கு தன் மகளை அறிமுகப்படுத்தினார். ஏவுகணையை தந்தை மற்றும் அதிகாரிகளுடன் சேர்ந்து ஜூ அய் பார்வையிடும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகின.
இந்நிலையில், 2-வது முறையாக தன் மகளுடன் கிம் ஜாங் உன் தோன்றி உள்ளார். அணு ஆயுத விஞ்ஞானிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் தந்தை கிம் ஜாங் உன்னுடன், சேர்ந்து மகள் ஜூ அய்-யும் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
Hwasong-17 ICBM அணு ஆயுத சோதனை வெற்றி பெற்றதை அடுத்து அதில் பணியாற்றியவர்கள் கவுரவிக்கப்பட்டதாகவும் அந்த நிகழ்வில் தந்தை கிம்முடன், மகள் ஜூ அய் கலந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.மேலும் அணு ஆயுத ஆராய்ச்சியில் ஈடுபட்ட விஞ்ஞானிகள், தொழில்நுட்ப கலைஞர்கள், பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் அதிபர் கிம் மற்றும் மகள் ஜூ அய் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு இரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ள நிலையில், அதில் 2-வது மகளான ஜூ அய்-யின் மீது அவருக்கு அளவு கடந்த பாசம் எனக் கூறப்படுகிறது. அதேநேரம் வடகொரியாவின் அடுத்த தலைவருக்கான பயிற்சியில் கிம் ஜாங் உன், தன் மகளை களமிறக்கி உள்ளதாக செய்திகள் வெளியாகி வேகமாக பரவி வருகின்றன.
இதையும் படிங்க: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை - வானிலை மையம்