டொராண்டோ: கடந்த ஜூன் 18ஆம் தேதி கனடாவில் வைத்து காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு இந்திய ஏஜெண்ட்கள்தான் காரணம் என கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, இந்தியா-கனடா உறவின் இடையே பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. மேலும், இந்தியா இந்த குற்றச்சாட்டுகளை அபத்தமானது என்று நிராகரித்தது மற்றும் ஒரு மூத்த கனேடிய தூதரக அதிகாரியை வெளியேற்றியது.
இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான நம்பகமான குற்றச்சாட்டுகள் இருந்த போதிலும், அதனுடன் நெருக்கமான உறவுகளை உருவாக்க கனடா உறுதி பூண்டுள்ளது என்று ட்ரூடோ கூறியதாக, கனடா நாட்டைச் சேர்ந்த முன்னணி செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
அதன்படி, மாண்ட்ரீலில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய ட்ரூடோ, "சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கான முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கனடாவும் அதன் நட்பு நாடுகளும் இந்தியாவுடன் ஆக்கப்பூர்வமான உறவைக் கொண்டிருக்க வேண்டும். இந்தியா வளர்ந்து வரும் பொருளாதார சக்தியாக இருக்கிறது. குறிப்பாக, புவிசார் அரசியலில் முக்கிய இடத்தில் இருக்கிறது. இந்தோ-பசிபிக் விவகாரத்தில் நாங்கள் இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை உருவாக்குவதில் மிகவும் தீவிரமாக இருக்கிறோம்.
அதேநேரம், சட்டத்தின் அடிப்படையில் ஆட்சி செய்யும் நாடாக இருப்பதால், இந்த விஷயத்தின் முழு உண்மைகளைக் கண்டறிய இந்தியா, கனடாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதை நான் வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறியதாக அந்த செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.
மேலும், "இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்திக்கும்போது ஹர்தீப் கொலை குறித்து கேட்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் உறுதி அளித்துள்ளார் என்றும், கனடா மண்ணில் கனடா குடிமகன் ஒருவரை இந்திய அரசின் ஏஜெண்டுகள் கொன்றதாக நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள் இருப்பது முக்கியமானது என்பதால், இந்த விவகாரம் குறித்து இந்திய அரசாங்கத்திடம் பேசுவதில் அமெரிக்கர்கள் எங்களுடன் இருக்கிறார்கள். இந்த விவகாரத்தைச் சட்டத்தின் ஆட்சியை மதிக்கும் அனைத்து ஜனநாயக நாடுகளும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்" என்றும் அவர் தெரிவித்ததாக அந்த செய்தித்தாளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய வீரர்கள் பதக்க வேட்டை.. 25 பதக்கங்களுடன் 5வது இடத்திற்கு முன்னேற்றம்!