இஸ்ரேல்: இந்தியாவின் 77வது சுதந்திர தினம் நேற்று(ஆகஸ்ட் 15) கொண்டாடப்பட்டது. இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் இந்திய சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடினர். அதேபோல், இந்தியாவின் நட்பு நாடுகள் இந்திய சுதந்திர தினத்திற்கு வாழ்த்து கூறின.
அந்த வகையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்திய சுதந்திர தினத்தையொட்டி இந்திய பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் வாழ்த்து கூறினார். இரு நாடுகளின் நட்புறவும் தொடர்ந்து வலுப்பெற வேண்டும் என்றும் நெதன்யாகு கூறியிருந்தார். மேலும், நேற்று இஸ்ரேல் நாட்டின் எலாட் நகரத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் தேசியக் கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இந்தியாவின் 77வது சுதந்திர தினத்தை ஒட்டி, நேற்று மாலையில் எலாட் நகரத்தில் 'இந்திய யூத கலாச்சார சதுக்கம்' திறக்கப்பட்டது. இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில், எலாட் நகர மேயர் எலி லிங்க்ரி, துணை மேயர் ஸ்டாஸ் பில்கின், இஸ்ரேலில் வாழும் இந்திய சமூகத்தினர், எலாட் நகர அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
பல ஆண்டுகளாக இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையே நீடித்து வரும் நட்புறவை கொண்டாடும் விதமாகவும், இரு நாடுகளின் பாரம்பரியம், கலாச்சாரம் உள்ளிட்டவற்றை எடுத்துக் கூறும் வகையிலும் இந்த சதுக்கம் திறக்கப்பட்டது. இந்த சதுக்கத்தில் உள்ள சுவரின் இரு மூலைகளிலும் இந்தியா மற்றும் இஸ்ரேலின் கொடிகள் வரையப்பட்டுள்ளன. இந்திய யூதர்கள் கொண்டாடும் பாரம்பரிய 'மலிடா' விழாவை குறிக்கும் வகையிலான சின்னங்களும் இடம் பெற்றிருந்தன.
இந்த சதுக்கத்தில் இரு நாடுகளின் உறவு பற்றி ஒரு செய்தி எழுதப்பட்டிருந்தது. அதில், "இந்தியா -இஸ்ரேல் நட்புறவு என்பது இரு நாடுகளுக்கு இடையிலான நம்பிக்கை மற்றும் நாகரீகப் பிணைப்புக்கு சாட்சியாகும். இந்த பிணைப்பு, பல நூற்றாண்டுகளாக பகிரப்பட்ட பாரம்பரியம், நன்மதிப்புகள் மற்றும் மக்களின் நம்பிக்கையை அடிப்படையாக் கொண்டது. இந்த நட்பு புவியியல் எல்லைகளைக் கடந்து, வளமான எதிர்காலத்தை உருவாக்குவதில் இரு நாடுகளிலும் உள்ள எதிர்கால சந்ததியினருக்கு ஊக்கம் அளிக்கட்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எலாட் நகர மேயர் எலி லிங்க்ரி கூறும்போது, "இந்த சதுக்கம் இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான அன்பு, நட்பு, பரஸ்பர ஆழமான உறவைக் குறிக்கிறது. இந்திய யூத சமூகத்திற்கும் எலாட் நகரத்திற்கும் இடையிலான உறவை எடுத்துரைக்கிறது" என்றார்.
இதையும் படிங்க: Independence Day 2023: இந்தியாவின் ஜவுளி பாரம்பரியத்தைக் கவுரவித்த கூகுள் டூடுல்.!