ஹைதராபாத்: இலங்கை அதிபரின் வீட்டை ஆக்கிரமித்த ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் அவரை பதவி விலக கோரி கோஷமிட்டனர்.இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதிபருக்கு எதிராக பொதுமக்களின் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இதுதொடர்பாக இலங்கை கப்பல் கூட்டு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டாக்டர். டேன் மலிக்கா குணசேகரா ஈடிவி பாரத்தின் ஆர் பிரின்ஸ் ஜெபகுமாருக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதனை பார்க்கலாம்.
ஈடிவி பாரத்: நீங்கள் கடல் வாணிப பிரிவில் பணியாற்றியுள்ளீர்கள்? இந்த நெருக்கடியான சூழ்நிலையில் இலங்கையின் ஏற்றுமதியை எவ்வாறு காண்கிறீர்கள்?
டாக்டர் குணசேகரா: என்னை பொறுத்தவரையில் எங்கள் நாடு ஒரு தங்கச்சுரங்கம். எங்களிடம் பல வகையான வளங்கள் உள்ளன. எங்களின் மனித வளம்தான் எங்களது பலம். தெற்காசியாவிலேயே அதிகம் படித்த இளைஞர்கள் எங்கள் நாட்டில்தான் உள்ளனர். எங்கள் இளைய தலைமுறையினர் கல்வி மீது அதிகம் ஆர்வமுள்ளவர்கள். அவர்கள்தான் இந்த நாட்டின் உண்மையான உந்து சக்தி. இலங்கையின் பொருளாதாரத்திற்கு கைத்தொழில் தொடர்பான ஏற்றுமதி ஒரு திறவுகோல் என இருந்தது. இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக, கரோனா தொற்று போன்ற பல்வேறு காரணிகளால் ஏற்றுமதி வெகுவாகக் குறைந்தது.
கொழும்பு துறைமுகம் சர்வதேச அளவில் 22வது இடத்தில் உள்ளது, இது ஒப்பீட்டளவில் உயர் தரவரிசையில் உள்ளது. இது இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பிற அண்டை நாடுகளுக்கான முக்கியமான வர்த்தக துறைமுகங்களில் ஒன்றாகும். சமீப காலம் வரை, நாங்கள் நன்றாகவே செயல்பட்டோம். இந்த ஆண்டின் தொடக்கத்தில் எங்கள் TEU(Twenty Equipment Unit)கள் சுமார் 7.5 மில்லியனாக இருந்தது.
ஈடிவிபாரத்: இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலாத்துறையின் பங்கு 5% ஆகும். இந்தத் தொழில் தற்போது எப்படி இருக்கிறது?
டாக்டர் குணசேகரா: தற்போது எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக போக்குவரத்து பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறோம். மின்சாரத்தைப் பொறுத்தவரை தேவையான அளவு இல்லை. சுற்றுலாத் துறை உட்பட பல வகையில் நாட்டை பாதித்துள்ளது. சில நாட்களுக்கு முன் விமான நிலையத்திற்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சைக்கிளில் வருவதை பார்த்தேன். இதுபோன்று நடப்பதை இதற்கு முன் பார்த்ததில்லை. இத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கைக்கு வருவதற்கு சுற்றுலாப் பயணிகள் எவ்வளவு விரும்புகிறார்கள் என்பதை இது காட்டுகிறது. வரலாறு மட்டுமல்ல, கடற்கரைகள் முதல் மலைநாடு வரையிலான சுற்றுச்சூழல் தொடர்பான பல சொத்துக்களையும் சந்தைப்படுத்துவதற்கான சாத்தியம் எங்களிடம் உள்ளது.
ஈடிவிபாரத்:எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க அரசாங்கம் என்ன செய்கிறது?
டாக்டர் குணசேகரா:சுற்றுலா மற்றும் எரிசக்தி துறைகளைச் சேர்ந்தவர்கள் உட்பட அமைச்சர்களும் சுற்றுலாவிற்கான தேவைகளை மேம்படுத்தவும், எரிபொருள் பிரச்சனைகளை தீர்க்கவும் வெளிநாடுகளுக்கு சென்று வருகின்றனர். ஆனால் சுற்றுலாப் பயணிகளுக்கு சேவை செய்ய தேவையான உள்கட்டமைப்புகள் இல்லாதபோது இந்த நடவடிக்கைகள் போதுமானதாக இருக்காது.
உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்ப சுற்றுலாவை மேம்படுத்தி, போக்குவரத்து பிரச்னையில் திருப்பத்தை ஏற்படுத்த வேண்டும். எரிபொருள் நெருக்கடியால் போக்குவரத்து செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. நான் ஒரு வழக்கறிஞர். எனக்கும் வெளியே சென்று வருவது கடினமாக உள்ளது. கொழும்பில் நீதிமன்றங்கள் இயங்கவில்லை.
ஈடிவிபாரத்: எல்லாம் அப்படியே நின்று விட்டது, அப்படி கூறலாமா?
டாக்டர் குணசேகரா: நாட்டில் எரிபொருள்தான் முக்கியமான தேவை. நான் பொது போக்குவரத்தை பயன்படுத்துகிறேன். சில சமயங்களில் எனது வாகனங்களையும் பயன்படுத்தி வருகிறேன். எரிபொருள் கிடைக்காததால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆம், வாழ்க்கை ஸ்தம்பித்து விட்டது என்று கூறலாம்.
ஈடிவிபாரத்:சுற்றுலா மற்றும் எரிபொருள் நெருக்கடிகளுக்கு தீர்வு காண இலங்கை அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக கூறுகிறீர்கள்.இதற்காக என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்?
டாக்டர் குணசேகரா:அந்நியச் செலாவணி கையிருப்பு போதிய அளவு இல்லாததால் நெருக்கடி உள்ளது. இதன் காரணமாக, அமெரிக்க டாலர் மதிப்பில் தொகை செலுத்த வேண்டும். இதன் மூலம் வாங்க கூடிய எண்ணெய் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வாங்குவது எளிதானது அல்ல. இது உள்ளூர் சந்தையை பாதித்துள்ளது. நல்ல அந்நியச் செலாவணி இருந்தால் ஒழிய, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் எரிபொருளை இறக்குமதி செய்ய முடியாது. சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவை அதன் நடவடிக்கைகளை இன்னும் துரிதப்படுத்தவில்லை. இது இயற்கையானது. இந்த சில ஆண்டுகளாக எங்களிடம் இல்லாத ஒரு கடுமையான நிதி இழப்பை காட்டுகிறது. இதுவரை காணாத மிகப்பெரிய இழப்பீட்டை சந்தித்து இருக்கிறோம்.
ஈடிவிபாரத்: மின்வெட்டு குறித்து பேசினீர்கள். அங்கு எப்போது நிலைமை சீரடையும்?
டாக்டர் குணசேகரா:இலங்கை அனல் சக்தி மின்சாரத்தையே அதிகம் நம்பியுள்ளது. நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டும். மின்சாரத்திற்காக எங்கள் நீர்த்தேக்கங்களில் பருவமழை மற்றும் நீர் சேமிப்பு அளவை நம்பியுள்ளோம். எங்களிடம் நிலக்கரி வாங்குவதற்கு பணம் செலுத்த டாலர்கள் இல்லாதபோது, நிலக்கரி மின்சாரத்திற்கு சாத்தியமில்லை. இதற்கு முன்னுரிமை அடிப்படையில் நிதியளிக்க வேண்டும்.
இந்தப் பிரச்சனைகளுக்கு நாம் விரைந்து தீர்வு காண வேண்டும். சுற்றுலா பயணிகளுக்கு போக்குவரத்து முக்கியமானது. அவர்கள் குழுக்களாக வருகிறார்கள், அவர்களுக்கு நாங்கள் போக்குவரத்து வசதியை வழங்க வேண்டும். இது ஒரு வகையான மேக்ரோ நிலைமையை அரசாங்கம் உடனடியாக தீர்க்க வேண்டும். பல வழிகளில் நிலவும் இந்த நிலைமையை அரசாங்கம் உடனே தீர்க்க வேண்டும்.
ஈடிவிபாரத்:மின்சாரம் இல்லாமல் சுகாதார சேவைகள் எவ்வாறு நடைபெறுகின்றன?
டாக்டர் குணசேகரா: மருந்து தட்டுப்பாடு மற்றொரு முக்கியமான பிரச்சனை ஆகும். மருந்து வாங்க எங்களுக்கு மீண்டும் டாலர்கள் தேவைப்படுகிறது. இந்தியா மருந்து வழங்கியுள்ளது. இன்று ஒரு குழந்தையை வண்டியில் சலைன் போட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் படத்தைப் பார்த்தேன். இதுபோன்ற கஷ்டங்களை நாங்கள் அனுபவித்ததில்லை. வடக்கில் கடுமையான யுத்தம் நடைபெறும் போது கூட இலங்கை இப்படியொரு நிலையை கண்டதில்லை.
ஈடிவிபாரத்: இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரை விட தற்போதைய நிலைமை மோசமாக உள்ளதா?
டாக்டர் குணசேகரா: மக்களுக்கு இது மிகவும் கடினமான நேரம் ஆகும். எங்களால் சுதந்திரமாக பயணம் செய்ய முடியவில்லை. எங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியவில்லை. எந்த நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று தெரியவில்லை. வடக்கில் கிளர்ச்சிகள் தலை விரித்தாடுகின்றன. இருப்பினும், இப்போது மக்கள் துன்பம் அடந்ததால் நம்பிக்கையையும் இழந்துள்ளனர்.
ஈடிவிபாரத்:உலக நாணய நிதியத்தின் தொகுப்பு வர தாமதமாகும் என தெரிகிறது, இலங்கையின் உடனடி நடவடிக்கை என்ன ?
டாக்டர் குணசேகரா:கடந்த சில மாதங்களாக அரசாங்கம் இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பாதையில் செல்வதாக நான் நினைக்கவில்லை. அரசாங்கம் எரிபொருளை வாங்கி விநியோகித்துக் கொண்டிருந்தது. நீண்ட காலத்திற்கு தக்கவைக்க முதலீடுகளைக் கொண்டு வருவதில் அவர்கள் ஈடுபட்டதை நான் பார்க்கவில்லை. அரசு நஷ்டத்தில் உள்ளது. இதனை மக்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் இன்று எல்லாமே தகர்க்கப்பட்டுள்ளன. இலங்கையை யாரும் தங்கச் சுரங்கமாகப் பார்ப்பதாக நான் நினைக்கவில்லை. கடல் வளங்கள் மட்டுமே சரியான முறையில் பயன்படுத்தப்பட வேண்டும்.
ஈடிவிபாரத்:அதிக வருவாய் ஈட்ட கடல் வளங்களை சுரண்டுவதை தடுக்க அரசு கவனம் செலுத்த வேண்டுமல்லவா?
டாக்டர் குணசேகரா: நான் ‘நீல வளம்’ மீதான ஆய்வை மேற்கொண்டுள்ளேன். இலங்கையின் வளத்தை ஜப்பான் போன்ற ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் " கடல்வளங்கள் அதிகம். இதுபோன்ற வழிகளில் வருமானம் ஈட்டுவதில் கவனம் செலுத்த வேண்டும். அப்படிச் செய்திருந்தால் இந்தப் பொருளாதார நெருக்கடியிலிருந்து கூட இலங்கை தப்பித்திருக்கலாம். அதில் அரசும், தலைவர்களும் கவனம் செலுத்தவில்லை.
ஈடிவிபாரத்:நாட்டின் பொருளாதாரத்தை மீட்க என்ன பரிந்துரைப்பீர்கள்?
டாக்டர் குணசேகரா: IMF(உலக நாணய நிதியம்) கடன் நிலைத்தன்மை மற்றும் நிலையான பொருளாதார சூழலில் கவனம் செலுத்துகிறது. சர்வதேச முகவர் நிறுவனங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் இலங்கை கடன்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரமும் நிலையானதாக இருக்கும் வகையில் கடனை ஒரு குறிப்பிட்ட முறையில் பராமரிக்க வேண்டும். முறையான கொள்கைகள் இல்லாத நாட்டில் பணத்தை வாரி இறைக்க எந்த அமைப்பும் தயாராக இருக்காது. பொருளாதாரத்தை மீட்டெடுக்க குறுகிய கால, இடைக்கால மற்றும் நீண்ட கால உத்திகளை கையாள வேண்டும். இது வெறும் கறுப்பு-வெள்ளை இருப்புநிலைக் குறிப்பாக இருக்கக் கூடாது.
பொருளாதாரத்தின் முழுமையான வளர்ச்சிக்கு, நீண்ட காலத்திற்கு வருமானத்தையும், குறுகிய காலத்தில் கடன் நிர்வாகத்தையும் எவ்வாறு உருவாக்க முடியும் என்பதைப் பார்க்க வேண்டும். இடைக்காலத்தில், முதலீட்டிற்காக நாட்டை வெளியாட்களுக்கு சந்தைப்படுத்த வேண்டும். தற்போதைய அரசாங்கம் நிலையானது என நான் கருதவில்லை. இன்று மக்கள் அதிபர் மாளிகைக்குள் புகுந்து அதனை கையகப்படுத்தும் சூழ்நிலை உள்ளது.
நாட்டு மக்கள் அராஜகத்தின் வழியில் செல்ல முடியாது. இன்று செய்தது போல் மக்கள் அரசாங்கத்தின் முக்கிய நிறுவனங்களுக்குள் நுழையக்கூடிய மற்றொரு ஆப்கானிஸ்தானாக இலங்கை மாறக் கூடாது. கட்சி பேதங்களுக்கு அப்பால் சிந்தித்து நாட்டை ஒட்டுமொத்தமாக முன்னேற்ற வேண்டும். இந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு முறையான பேச்சுவார்த்தையும், அனைத்துக் கட்சி அணுகுமுறையும் இருக்க வேண்டும்.
ஈடிவிபாரத்:எனவே அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் உங்கள் பதில் அனைத்து கட்சி அரசா?
டாக்டர் குணசேகரா: தலைவர்கள் பாராளுமன்றம் செல்ல வேண்டும். அவர்கள் நம்பக்கூடிய ஒருவரை நாடாளுமன்றத்தில் நியமிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மைலேஜ் பார்க்கக்கூடாது. இத்தகைய தலைவர்கள், பொதுமக்களின் அதிருப்தியை எவ்வாறு சமாளிப்பது என்பதை அறிந்திருக்க வேண்டும், மேலும் அதை வெற்றிகரமான சூழ்நிலையாக மாற்ற வேண்டும்.
அரசியல்வாதிகளிடம் எதேச்சதிகாரம் அல்லது சர்வாதிகாரம் இருக்கக் கூடாது. இந்த நாடு ஒரு குடியரசு, எனவே கொள்கைகள் மக்களை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும். இல்லையெனில், மக்கள் போராட்டத்தை மீண்டும் தொடருவார்கள். நாடுகளின் சொத்துக்களை மற்ற நாடுகளுக்கு விற்பதற்காக அரசு இல்லை. அவற்றை நாம் நிர்வகிக்க வேண்டும்.
இதையும் படிங்க:பிரதமரின் வீடு தீக்கிரை, அதிபர் ராஜினாமா- என்ன நடக்கிறது இலங்கையில்? டாப்-10 தகவல்கள்