சென்னை: மனிதர்களின் அடிப்படைத் தேவை உணவு, உடை, இருப்பிடம் என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் இவற்றை எதுவும் இல்லாமல் துன்பப்படும் மனிதர்களை ஆதரிக்க அடிப்படையாகத் தேவைப்படுவது அன்புதான். உற்றார், உறவினர், நண்பர் என்ற எவ்வித தொடர்பும் இன்றி கண்ணில் பார்க்கும் ஏதோ ஒரு கஷ்டப்படும் நபருக்கு நம்மால் முடிந்த உதவியைச் செய்தால் அதுதான் மனிதாபிமானம்.. அதுதான் இறைத்தன்மை.. அதுதான் சேவை.
'அன்பிலார் எல்லாம் தமக்குரியார், அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. (குறள் எண் 72)' (அன்பில்லாத மனிதர்கள் எல்லாவற்றையும் தமக்கே உரியதென்று எண்ணுவார்கள். ஆனால் அன்புள்ளவர்களோ தங்கள் எலும்புகூட அடுத்தவர்க்கு உரியதென எண்ணுவார்கள்.) என வள்ளுவர் சொல்லி விட்டார்.
தமிழ் இனத்திற்கு மட்டும் இன்றி ஒட்டுமொத்த மனிதக் குலத்தின் நலனுக்காக அவர் கூறிய குறள்.., அல்பேனியா நாட்டை சேர்ந்த ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ என்ற இளம் பெண்ணின் காதுகளுக்கு மட்டும் கேட்டு விட்டதோ என்னவோ, உரோமன் கத்தோலிக்க அருட் சகோதரியான இவர் கடல் கடந்து இந்தியாவின் கொல்கத்தா நகரை வந்தடைந்தார்.
தனது அன்பின் கரங்களால் அனைவரையும் கட்டி தழுவிய ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ அன்னை தெரேசா என்று இன்று அனைவராலும் அறியப்படுகிறார். இவரின் ஈகை குணம் குறித்தும் இவரின் அமைதிப் பெருங்கடலின் ஆழம் குறித்தும் இன்றைய தலைமுறை மட்டும் அல்ல... இனியும் ஆயிரம் ஆயிரம் தலைமுறைகள் தெரிந்துகொள்ள வேண்டும்.
"ஒருமுறை அன்னை தெரேசா செல்வச் செழிப்பு மிக்க நபர் ஒருவரிடம் இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும் உங்களால் இயன்றதைக் கொடுங்கள் எனக் கேட்டிருக்கிறார்.. அந்த நபரோ அன்னை தெரேசாவை கண்டுகொள்ளாமல் நின்றிருக்கிறார். மீண்டும் சகோதரரே உங்களால் முடிந்ததைக் கொடுங்கள்... ஒருவருக்கு ஒருவேளை உணவு வழங்க உதவியாக இருக்கும் என மீண்டும் கேட்டிருக்கிறார்.
பிச்சை கேட்டவாறு நின்றுகொண்டிருக்கிறார் எனக் கோபமுற்ற அந்த நபர் அன்னை தெரேசாவின் முகத்தில் காரி உமிழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அதைத் துடைத்துக்கொண்ட அன்னை தெரேசா இது எனக்கானது... மற்றவர்களுக்கு உதவுங்கள் என இரு கரங்களையும் நீட்டி மீண்டும் கேட்டிருக்கிறார். அந்த நிமிடம் கண்கலங்கிய அந்த நபர் தொடர்ந்து பலருக்கு உதவியதாகக் கூறப்படுகிறது. "இப்படி ஒரு நிகழ்வை நாம் கண்ணால் பார்க்கவில்லை.. ஆனால் உண்மைகள் எப்போதும் புதைந்துபோவது இல்லை.
கருணையின் முழு வடிவமாக இருந்த அன்னை தெரேசாவின் நினைவு தினத்தைக் கடைப்பிடிக்கும் விதமாகவும், மனித துன்பங்கள் மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளைத் தணிப்பதில் தொண்டு நிறுவனங்களும் தனிநபர்களும் மேற்கொண்டு வரும் குறிப்பிடத்தக்கப் பங்கை அங்கீகரிக்கும் வகையிலும் இந்த நாள் (செப்.5) சர்வதேச தொண்டு நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல், தாமுடைமை வைத்திருக்கும் வன்க ணவர்.’ (குறள் எண் 228) (கொடுக்காமல் தாங்கள் சம்பாதித்ததைத் தாங்களே வைத்துக் கொண்டு பின் அதை இழக்கும் மனிதர்கள், கொடுப்பதன் இன்பத்தை அறியாத கொடியவர்கள்) உள்ளிட்ட பல சேவை தொடர்பான அறிவுரைகளை வழங்கி இருக்கிறார் திருவள்ளுவர்.
கொடுத்தல் பணம் மட்டுமா.? என்று கேட்டால் அது கிடையாது.. சேவை என்பது உணவு வழங்குவது மட்டுமா.? என்று கேட்டால் அதுவும் கிடையாது... இந்த உலகில் நீங்கள் வாழ என்னவெல்லாம் தேவைப்படுகிறதோ அது அத்தனையும் பிறருக்கும் கிடைக்க வேண்டிய ஒன்று. ஆதரவற்றவரிடம் அன்பாகப் பேசுவதும்.. அடைக்கலம் இல்லாதவர்களுக்கு அருகாமையில் அமர்வதற்காவது இடம் கொடுப்பதும்.. உணவு பிறருக்குக் கொடுக்காவிட்டாலும் உணவை வீணடிக்காமல் இருப்பதும்.. நம்மைப்போலவே பிறரையும் கருதுவதும் சேவை குணம்தான். தொண்டாற்றுவோம்...! மனிதம் காப்போம்..!
(வாசகர்களே, "உங்கள் ஈடிவி பாரத் தமிழில் நாள் தோறும் Day Special சிறப்புச் செய்திகள் வெளியிடப்படும். இன்றைய நாள் சிறப்புச் செய்தியாக " சர்வதேச தொண்டு நாள்" குறித்து எழுதியுள்ளோம். நாளை (செப்.6) இதுபோன்று இந்தியாவால் கடைப்பிடிக்கப்படும் "பாதுகாப்பு தினம்" தொடர்பான சிறப்புச் செய்தி வெளியாகும்"..படியுங்கள்.! பயன்பெறுங்கள்.!)
இதையும் படிங்க: அழகான கடிதம் எழுதுவது எப்படி? - உலக கடிதம் எழுதும் நாள் சிறப்பு தொகுப்பு!