டெஸ் மொயின்ஸ் : அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதத்தில் அதிபர் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. ஆளும் ஜனநாயக கட்சி தரப்பில் அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. அதேநேரம் பிரதான எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியில் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் இழுபறி நீடித்து வந்தது.
மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக டிரெம்ப் அறிவித்து இருந்த நிலையில், அவருக்கு போட்டியாக இந்திய வம்சாவெளியை சேர்ந்த தொழில்முனைவோர் விவேக் ராமசாமி போட்டியிட உள்ளதாக அறிவித்து இருந்தார். வேட்பாளர் அறிவிப்புக்கு முன்னதாகவே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடத் தொடங்கிய விவேக் ராமசாமி தனக்கான ஆதரவை திரட்டுவதில் மும்முரம் காட்டி வந்தார்.
இந்நிலையில், அதிபர் வேட்பாளரை இறுதி செய்வதில் குடியரசு கட்சிக்குள்ளேயே உட்கட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. ஐயோவா மாகாணத்தில் நடந்த உட்கட்சி தேர்தலில் இந்திய வம்சாவெளி விவேக் ராமசாமியை விட முன்னாள் அதிபர் டொனல்ட் டிரம்ப் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது.
இந்திய வம்சாவெளி விவேக் ராமசாமி 15 இடங்களுக்கு கீழ் இறங்கியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்கா அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என விவேக் ராமசாமி அறிவித்து உள்ளார். அதேநேரம் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்புக்கு ஆதரவாக விவேக் ராமசாமி பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
77 வயதான டொனல்ட் டிரம்ப் மீது பல்வேறு முறைகேடு புகார் இருந்த போதிலும் அவருக்கான எதிர்பார்ப்பு குறையவில்லை எனக் கூறப்படுகிறது. அதேநேரம், டொனால்ட் டிரம்ப் தான் எதிர்கட்சி அதிபர் வேட்பாளர் என்னும் பட்சத்தில் அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை எடுத்துக்காட்டி மீண்டும் அதிபராகும் முனைப்பில் ஜோ பைடன் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
அதேநேரம் உக்ரைன் - ரஷ்யா போர், இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரை கையாண்ட விதம், அமெரிக்க பொருளாதார சுணக்கம், சர்வதேச அளவிலான அமெரிக்காவின் நிலைப்பாட்டில் பின்தங்கல் உள்ளிட்ட காரணங்களை முன்னிலைப்படுத்தி அதிபர் பதவியை தன் வசப்படுத்த டிரம்ப் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : விமானங்கள் ரத்தா? தாமதமா? நிறுவனங்களுக்கு டிஜிசிஏ கட்டுப்பாடு! புதிய விதிமுறை கூறுவது என்ன?