இஸ்ரேல்: 1948ஆம் ஆண்டு ஒரு தேசம் இரண்டாக பிரிக்கப்பட்டது. அதில் ஒரு பிரதேசம் பிரிக்கப்பட்ட தினம் முதலே தனி நாடக அங்கீகரிக்கபட்டது. மற்றொரு பிரதேசம் இன்று வரை தனி நாடு அங்கீகாரம் வேண்டி போராடி வருகிறது. இதில் அங்கீகரிக்கபட்ட நாடு இஸ்ரேல். அங்கீகரிக்க போராடி வரும் நாடு, பாலஸ்தீனம்.
இஸ்ரேல்: யூதர்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு மத்திய கிழக்கு நாடாகும். இங்கு 70 சதவிகிதத்துக்கும் அதிகமான யூதர்கள் வாழ்ந்து வருகின்றனர். சுமார் 20 சதவீதம் இஸ்லாமியர்களும், 10 சதவிகிதத்துக்கும் குறைவாக கிறிஸ்தவர்களும் மற்ற சிறுபான்மை மக்களும் வாழ்ந்து வருகின்றனர்.
பாலஸ்தீனம்: மற்றொரு பிரதேசமான பாலஸ்தீனம் இன்று வரையில் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு பகுதியாகத்தான் குறிப்பிடப்பட்டு வருகிறது. 2012ஆம் ஆண்டுதான் பாலஸ்தீனம் ஐ.நா-வில் அப்சர்வர் ஸ்டேட்' என்கிற அந்தஸ்தைப் பெற்றது. இங்கு 90 சதவிகிதத்துக்கும் அதிகமாக இஸ்லாமிய மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
காசா பகுதி விவகாரம்: இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே அமைந்துள்ளது காசா பகுதி. இதன் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசா முனை பகுதி உள்ளது. இந்த பகுதி ஹமாஸ் போராளிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்த அமைப்பை இஸ்ரேல், பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது. இவ்வமைப்புதான் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது என்பது இஸ்ரேலின் நீண்ட கால குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.
இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து காசாவை கைப்பற்ற முயற்சி செய்து வருகிறது என்பது பாலஸ்தீன மக்களின் குற்றச்சாட்டு. அதேபோல் ஹாமாஸ் அமைப்பிற்குத் தேவையான நிதியை ஈரான் செய்து வருவதாகவும் இஸ்ரேல் கூறி வருகிறது. இரு நாடுகளும் மாறி மாறி குற்றம்சாட்டிக் கொள்வதும், தாக்குதல்கள் நடத்துவதும் பல காலமாக தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனால் காசா பகுதி மக்கள் எப்போதும் உயிர் பயத்துடன் வாழ்ந்து வருகிறார்கள்.
மீண்டும் வெடித்த இஸ்ரேல் பாலஸ்தீன போர்: இந்நிலையில், பாலஸ்தீனத்தை அடிப்படையாகக் கொண்ட ஹமாஸ் பயங்கரவாதிகள் குழு இஸ்ரேலில் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தின. ஏறத்தாழ 5 ஆயிரம் ராக்கெட் தாக்குதல் இஸ்ரேலின் சர்ச்சைக்குரிய காசா உள்ளிட்ட பகுதியின் மீது நடத்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏறத்தாழ மூன்றரை மணி நேரம் நடந்த இடைவிடாத தாக்குதலில் ஜெருசலேம், சர்ச்சைக்குரிய காசா உள்ளிட்ட நகரங்கள் தீக்கிரையாகி காட்சி அளிக்கின்றன. இந்த திடீர் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. இஸ்ரேல் முழுவதும் அபாய ஒலிகள் ஒலிக்கப்பட்டு உள்ள நிலையில், அந்நாட்டு அரசு போர் நிலை சூழல் உருவாகி உள்ளதாக அறிவித்துள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்புப் படையானது ஹமாஸ் தீவிரவாதிகள் நாட்டுக்குள் ஊடுருவி உள்ளதாக தெரிவித்து உள்ளது. மேலும், பாராகிளைடிங் மூலம் தீவிரவாதிகள் ஊடுருவிய காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் இருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
இந்த திடீர் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹூ, பாதுகாப்புத் துறையினருடன் அவசர அலோசனை மேற்கொண்டு உள்ளார். இரு நாட்டுக்கும் இடையே போர் நிலவும் சூழல் ஏற்பட்டு உள்ளதால், உலகளாவிய அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது. மேலும், காசா பகுதியை ஒட்டிய இடங்களில் வசிக்கும் இஸ்ரேல் நாட்டு மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர வேண்டாம் என்றும் அரசு தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
போரில் பலியானோர் எண்ணிக்கை 300: இஸ்ரேல் மீதான ஹமாஸ் பயங்கரவாதக் குழுவின் பலமுனை தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 300-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. மேலும் 1,590 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இவர்களில் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேலுக்கு இந்தியா ஆதரவு: இஸ்ரேல் மீது பாலஸ்தீனிய ஹமாஸ் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதலை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில், இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்தும், தாக்குதலில் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு இந்தியா துணை நிற்கும் என பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
உதவி எண்கள் அறிவிப்பு: இஸ்ரேல் பாலஸ்தீன போர் வெடித்து வரும் நிலையில், அங்கு உள்ள அனைத்து இந்திய குடிமக்களுக்கும் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் இந்திய தூதரகத்தை நேரடியாகத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக 24 மணி நேரமும் இந்திய அரசைத் தொடர்பு கொள்ள அவசர உதவி எண் ஜவ்வால்: 0592-916418 என்ற எண் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ள +970-59291641, உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் வசிக்கும் தமிழர்கள், தமிழ்நாடு அரசைத் தொடர்பு கொள்ள +91-87602 48625, +91-99402 56444, +91-96000 23645 உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது மட்டுமின்றி nrtchennai@tn.gov.in, nrtchennai@gmail.com என்ற இணையதளங்களின் வாயிலாகவும், மின்னஞ்சல் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 300க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!