உலக மக்கள் தொகை தினத்தையொட்டி ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவை, அடுத்த ஆண்டு இந்தியா மிஞ்சிவிடும். உலக மக்கள்தொகை வரும் நவம்பர் 15ஆம் தேதி 800 கோடியை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது 2030-ல் 850 கோடியாகவும், 2050-ல் 970 கோடியாகவும் அதிகரிக்கக்கூடும்.
2023ஆம் ஆண்டில் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா மாறக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2022-ல் இந்தியாவின் மக்கள் தொகை 141 கோடியாக உள்ளது. 2050ஆம் ஆண்டில் 166 கோடியாக அதிகரிக்க கூடும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக உலக மக்கள் தொகை தினத்தையொட்டி மக்கள் தொகை பெருக்கம் குறித்து பேசிய ஐநா பொதுச்செயலாளர் அன்டனியோ குட்டரெஸ், "உலக மக்கள் தொகை இந்த ஆண்டு 800 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மருத்துவத்தின் வளர்ச்சியால் தாய்- சேய் இறப்பு விகிதம் குறைப்பு, மனிதனின் சராசரி ஆயுள்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது மனிதர்களின் ஆரோக்கியத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைக் கண்டு வியக்கும் தருணம். அதேநேரம் மக்கள் தொகை பெருக்கத்தால் பாதிக்கப்படும் நமது உலகை காக்க வேண்டிய பொறுப்பையும் உணர வேண்டிய தருணம்" என்று கூறினார்.