இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உதவியாளர் அசம் கானின் ‘சைஃபர் நாடகம்’ அறிக்கையின் நகலுக்காக, இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் (IHC) பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) மனுத் தாக்கல் செய்து உள்ளது.
தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி சார்பில், ஜுலை 25ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மனுவில்,இம்ரான் கானின் வழக்கறிஞர் சல்மான் அக்ரம் ராஜா, சைபர் நாடகம் தொடர்பான இந்த வழக்கில் விசாரணை அதிகாரியிடம், இம்ரான் கான் பதில் அளிப்பார் என்பதால் அசம் கானின் ‘சைஃபர் நாடகம்’ அறிக்கையின் நகலைக் கேட்டு உள்ளார்.
குறிப்பாக, கடந்த மாதம் முதல் காணாமல் போன இம்ரான் கானின் உதவியாளர் அசம் கான், திடீரென மாஜிஸ்திரேட் முன் ஆஜராகி, வாக்குமூலம் அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
2022 ஆம் ஆண்டில்,அப்போதைய பிரதமர் (இம்ரான் கான்), வாஷிங்டனுக்கு பாகிஸ்தான் தூதுவரால் அனுப்பப்பட்ட இராஜதந்திர நடவடிக்கையைப் பயன்படுத்தி, பாகிஸ்தான் நிர்வாகத்திற்கும், எதிர்க்கட்சிக்கும் எதிராக ஒரு கதையை உருவாக்கினார் என்று அந்த வாக்குமூல அறிக்கையில் கான் வெளிப்படுத்தியதாக ஜியோ நியூஸ் செய்தி வெளியிட்டு உள்ளது.
ஆசம் கானின் அறிக்கைக்கு பதில் அளித்த தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கான், இந்த விவகாரத்தில், முழுமையான தகவல் வரும் வரை இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க மாட்டேன் என்று கூறி உள்ளார். ARY செய்திகளின்படி, எந்த சூழ்நிலையில் இந்த அறிக்கைகளை அசம் கான் செய்தார் என்பது இன்னும் தெரியவில்லை என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.
இருப்பினும், உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா, முன்னாள் முதன்மைச் செயலாளர் அசம் கானின் வாக்குமூல அறிக்கை, பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) தலைவர் இம்ரான் கானுக்கு எதிரான ‘குற்றப்பத்திரிக்கை’ என்றும், அரசுக்கு எதிரான ‘சைபர் நாடகம்’ செய்ததற்காக அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
“பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) தலைவர் இம்ரான் கான், சைபர் சதி மூலம் அரசு நிறுவனங்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி உள்ளார். இந்த நாடகத்தை அரங்கேற்றியதற்காக அவர் தண்டிக்கப்பட வேண்டும்,” என்று சனாவுல்லா கூறியதாக ஜியோ நியூஸ் செய்தி வெளியிட்டு உள்ளது.
மே மாதம் 9ஆம் தேதி நடந்த சம்பவமும், அதே சதியின் தொடர்ச்சிதான் என்பதை சைபர் சதி தெளிவாக்குகிறது என்று அவர் மேலும் குறிப்பிட்டு உள்ளார். “இந்த குற்றத்திற்கு பிடிஐ தலைவர் பொறுப்பேற்க வேண்டும். இது தேசிய நலன் சார்ந்த விஷயம்,” என்று உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா மேலும் கூறி உள்ளார்.
தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI)கட்சி தலைவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு "சிறப்பு நீதிமன்றத்திற்கு அனுப்பப்படும்" என்று சனாவுல்லா கூறியதாக ஜியோ நியூஸ் மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டு உள்ளது.
இதையும் படிங்க: Qin Gang : சீன வெளியுறவு அமைச்சர் மாயம்? வெளியான அதிர்ச்சி பின்னணி?