மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டின் கார்லோஸ் மருத்துவ நிறுவனம், ஸ்பெயின் மருத்துவ அமைச்சகத்திடம் அறிக்கை ஒன்றை சமர்பித்துள்ளது. அதில், ஸ்பெய்னில் ஏற்பட்டுள்ள வெப்ப அலைக்கு 84 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 10,11,12 ஆகிய மூன்று நாள்களில், அந்நாட்டின் பல பகுதிகளில் 40 டிகிரி செல்ஷியஸை தாண்டி வெப்பம் நிலவியதை அடுத்து, இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்நாட்டின் தெற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளில் 45 டிகிரி செல்ஷியஸை வரை வெப்பநிலை நிலவி வருவது தெரியவந்துள்ளது.
இந்த வெப்ப அலை அடுத்த வாரம் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும், எனவே உயிரிழப்புகள் அதிகமாகலாம் என்றும் கூறப்படுகிறது. இது ஸ்பெய்னில், இந்தாண்டின் இரண்டாவது பெரிய வெப்ப அலையாக கருதப்படுகிறது. கடந்த ஜூன் 11 முதல் ஜூன் 20ஆம் தேதி வரை ஏற்பட்ட வெப்ப அலையினால், மொத்தம் 829 பேர் உயிரிழந்ததாக மருத்துவ அமைச்சகம் தெரிவித்திருந்தது. அப்போது, அதிகபட்சமாக 44.5 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்த கொடூர வெயிலில் இருந்த தப்பிக்க, அதிக நேரம் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளாமல், அதிகளவு தண்ணீரை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், வீட்டைவிட்டு வெளியே வருவதையும் குறைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விண்வெளியின் அற்புதப் புகைப்படங்களை எடுப்பதில் பங்காற்றிய 3 இந்தியப்பெண் விஞ்ஞானிகள்!