பெர்லின்: மனைவியுடன் ஏற்பட்ட தகராறால் குழந்தைகளை காரில் கடத்தி விமான நிலையத்தின் பாதுகாப்பு தடுப்புகளை உடைத்து, விமானங்கள் நிற்கும் இடத்திற்கு சென்ற நபரால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெர்மனி நாட்டின் ஹாம்பர்க் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (நவ் 4) இரவு மர்ம நபர் ஒருவர் விமான நிலையத்தின் பாதுகாப்பு தடுப்புகளை மீறி, காரில் உள்ளே நுழைந்து தரையிறங்கிய விமானங்கள் பெட்ரோல் நிரப்பும் இடத்திற்கு காரை ஓட்டிச்சென்றதாக கூறப்படுகிறது.
கையில் துப்பாக்கியுடன் காரில் இருந்து இறங்கிய நபர் வானை நோக்கி 2 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. இதனால் விமான நிலையத்திற்குள் இருந்த பயணிகள் அனைவரும் அவசரமாக வெளியேறியுள்ளனர். மேலும், விமான நிலையத்தில் இருந்த பாதுகாப்பு படையினர் அப்பகுதியை சூழ்ந்தனர்.
இதையடுத்து, விமான நிலையத்தில் பாதுகாப்பு கருதி நேற்று விமான சேவை அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், விமான நிலையத்தின் அனைத்து முனையங்களிலும் உள்ள நுழைவு வாயில்கள் அடைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இது குறித்து அந்நாட்டு போலீசார் கூறுகையில், “மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டால் யாருக்கும் பாதிப்பு இல்லை மற்றும் துப்பாக்கி சூடு நடத்தியவுடன் அந்த மர்ம நபர் காரில் இருந்து இரண்டு பாட்டில்களை எரிந்துள்ளார்” என தெரிவித்தார். மேலும், இந்த மர்ம நபரின் காரில் 2 குழந்தைகள் உள்ளதாக கூறப்படுகிறது.
காரில் வந்த நபர் யார் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட போது, அந்த நபரின் மனைவி காவல் துறையினருக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, “ தன்னுடன் ஏற்பட்ட தகராறால் குழந்தைகளை கடத்தி கொண்டு விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்” என அவர் தெரிவித்துள்ளார். மேலும், அவர் துப்பாக்கியால் சுட்ட போது, காரில் குழந்தைகள் இருந்ததை உறுதிசெய்துள்ளனர்.
இந்நிலையில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பதோடு, பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டு இருப்பதால் பயணிகளிடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது. இதையடுத்து காரில் விமான நிலையத்திற்குள் நுழைந்த நபரை பிடிக்கும் பணியில் பாதுகாப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: Nepal earthquake: நேபாளத்தில் பலி எண்ணிக்கை 128ஆக அதிகரிப்பு! நிவாரணம் தேடி அலையும் அப்பாவி மக்கள்!