டாக்கா: மேற்கு வங்க மாநிலமான பெனபோலில் இருந்து புறப்பட்ட பெனபோல் எக்ஸ்பிரஸ் வங்கதேசத்தின் டாக்காவில் உள்ள கமலாபூர் ரயில் நிலையம் அருகில் சென்ற போது அடையாளம் தெரியாத நபர்கள் இரவு 9 மணியளவில் ரயிலுக்கு தீ வைத்துள்ளனர். வங்கதேசத்தில் நாளை பொதுத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், மேலும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது எனவும் அந்நாட்டு தீயணைப்புத்துறை மற்றும் சிவில் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளனர். இந்த பெனபோல் எக்ஸ்பிரஸ் ரயிலில் 292 பயணிகள் இந்தியாவிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் கோபிபாக் பகுதி ரயில் நிலையம் அருகில் சென்ற போது இரவு 9 மணிக்கு ரயிலுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது என ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும் இறந்தவர்களில் இரண்டு பேர் சிறு குழந்தைகள் என தீயணைப்புத்துறை அதிகாரி முகமது மெயின் உத்தின் தெரிவித்தார். வங்கதேசத்தில் உள்ள தனியார் தொலைக்காட்சி அளித்துள்ள தகவலின் படி, ரயிலில் சில இந்தியர்களும் பயணம் செய்துள்ளதாக தெரிகிறது. ரயில்வே அதிகாரிகளால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை உடனடியாக கூற முடியாத நிலையில், அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை டாக்கா மருத்துவ கல்லூரியில் தீ விபத்து பிரிவில் அனுமதித்தனர்.
வங்கதேசத்தில் நாளை பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், 100 வெளிநாட்டு மேற்பார்வையாளர்கள் சென்றுள்ளனர். அதில் 3 இந்தியர்களும் டாக்கா சென்றடைந்துள்ளனர். வங்கதேச முன்னாள் பிரதமர் காலிதா சியாவின் வங்கதேச தேசிய கட்சி தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளது. வங்கதேச நாட்டில் கடைசி சில மாதங்களில் இரண்டு பெரும் ரயில் விபத்துக்கள் நடந்துள்ளது.
கடந்த டிசம்பர் 19ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்தின் போது அடையாளம் தெரியாத நபர்கள் ரயிலுக்கு தீ வைத்தனர். அந்த சம்பவத்தில் ஒரு தாயும் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர். அதேபோல் காஸிபூரில் ரயில் தடம் புரண்டதில் ஒருவர் பலியான நிலையில், 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதையும் படிங்க: ஈரானில் 2 இடங்களில் குண்டுவெடிப்பு; 73 பேர் உயிரிழப்பு!