லண்டன் : இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார். இங்கிலாந்து அமைச்சரவையில் அடுத்தடுத்து மாற்றங்களை கொண்டு வந்த பிரதமர் ரிஷி சுனக், அமைச்சரவை மறுசீரமைப்பில் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூனை வெளியுறவு அமைச்சராக நியமித்து உள்ளார்.
பாலஸ்தீனிய ஆதரவு போராட்டங்களை இங்கிலாந்து போலீசார் கையாண்ட விதம் விமர்சித்ததாக இங்கிலாந்து உள்துறை அமைச்சர் இந்திய வம்சாவெளியான சுயெல்லா பிரேவர்மனை, பிரதமர் ரிஷி சுனக் பதவி நீக்கம் செய்தார். அமைச்சரவை மறுசீரமைப்பின் போது சுயெல்லா பிரேவர்மனுக்கு பதிலாக ஜேம்ஸ் கிளர்வலி இங்கிலாந்து உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில், இங்கிலாந்து வெளியுறவு அமைச்சராக முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் நியமிக்கப்பட்டு உள்ளார். இங்கிலாந்து அரசியலில் மிக அரிதாக எம்.பி பதவியில் இல்லாத ஒருவருக்கு கேபினட் அமைச்சர் அந்தஸ்து வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. டேவிட் கேமரூன் தேர்ந்தெடுக்கப்படாத மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டு உள்ளதாக இங்கிலாந்து அரசு தெரிவித்து உள்ளது.
முன்னதாக, 2010 மற்றும் 2016 ஆண்டுகளில் இங்கிலாந்து பிரதமராக டேவிட் கேமரூன் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான நம்பிக்கை வாக்கெடுப்பு விவாகரத்தில் டேவிட் கேமரூன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்துறை அமைச்சராக இருந்த சுயெல்லா பிரேவர்மன், பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அடுத்தடுத்த நகர்வாக இங்கிலாந்து அரசியலில் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. பாலஸ்தீனிய ஆதரவு போராட்டத்தை இங்கிலாந்து போலீசார் கையாண்ட விதம் குறித்து விமர்சித்தற்காக சுயெல்லா பிரேவர்மன் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்பட்டாலும் இதில் பல்வேறு அரசியல் நகர்வுகள் உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போதைய கருத்து கணிப்புகளின் படி இங்கிலாந்தை ஆளும் பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி, எதிர்கட்சியான தொழிலாளர் கட்சியை காட்டிலும் 15 முதல் 20 புள்ளிகள் பின்தங்கிய நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் பொதுத் தேர்தல் நடக்கும் பட்சத்தில் அதில் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியை இழக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.
இதனால் பொதுத் தேர்தலுக்கு அடுத்து நடைபெறும் கட்சி தலைமைக்கான தேர்தலில் போட்டியிட திட்டமிட்டு உள்ள சுயெல்லா பிரேவர்மான் அதற்கான பணிகளில் ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக தற்போதை பதவி நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : இந்திய வம்சாவளி அமைச்சரை பதவி நீக்கம் செய்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்!