இலங்கையில் ஏற்பட்ட வரலாறு காணாத பொருளாதாரத் தட்டுப்பாடு காரணமாக மக்கள் தொடர்ந்து இலங்கை அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில், இந்த அசாதாரண சூழலுக்குப் பொறுப்பேற்று, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலக வலியுறுத்தியதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் (மே 09) மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.

இந்த நிலையில், இன்று (மே 11) செய்தியாளர்களிடையே பேசிய பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, போராட்டக்காரர்கள் கொழும்பு அலரி மாளிகையைச் சுற்றிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமையால், பிரதமர் அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டார் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டில் இயல்புநிலை திரும்பும் வரையில் மகிந்த ராஜபக்ச திருகோணமலை கடற்படை முகாமில் தங்கி இருப்பார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாட்டில் இன்றைய நிலைவரம் முழுமையாக கண்காணிக்கப்பட்டு அதன் அடிப்படையில் போலீஸ் ஊரடங்கு சட்டத்தை நீக்குவதா? அல்லது நீடிப்பதா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் தேவை ஏற்பட்டால் மீண்டும் ஊரடங்கை அமுல்படுத்த வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்துவதற்கு எவ்வித முயற்சியும் இடம்பெறவில்லை. அதற்கான சாத்தியமும் கிடையாது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஏழை எளிய மக்களுக்கு அன்பை பரிமாறிய கொழும்பு காதல் தம்பதி