ஐரோப்பிய உறுப்பு நாடுகளில் பெட்ரோல், டீசல் கார்களுக்கு தடை விதிக்க ஒப்புதல் - ஐரோப்பிய உறுப்பு நாடுகள்
ஐரோப்பிய உறுப்பு நாடுகளில் 2035ஆம் ஆண்டு முதல் பெட்ரோல், டீசல் கார்களுக்கு தடை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.
பிரஸ்ஸல்ஸ்: ஐரோப்பிய உறுப்பு நாடுகளில் கார்பன் வெளியேற்றத்தை 55 விழுக்காடாக குறைக்கும் நோக்குடன் 2035ஆம் ஆண்டு முதல் பெட்ரோல், டீசல் கார்களுக்கு தடை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நேற்று (அக். 27) ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய உறுப்பு நாடுகளான ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, குரோஷியா, சைப்ரஸ் குடியரசு, செக் குடியரசு, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, லாட்வியா, லிதுவேனியா, லக்சம்பர்க், மால்டா, நெதர்லாந்து, போலந்து, ஸ்லோவாக், போர்ச்சுகல் , ஸ்லோவேனியா, ஸ்பெயின் மற்றும் ஸ்வீடனில் 1990-2019 ஆண்டுகளுக்கு இடையே கார்பன் வெளியேற்றம் 61 விழுக்காடு அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பில் போக்குவரத்துத்துறை மட்டுமே 33.5 விழுக்காடு பங்கினை வகிக்கிறது.
இதனால் ஐரோப்பிய ஒன்றியம் 2050ஆம் ஆண்டிற்குள் போக்குவரத்து துறை மூலமாக வெளியாகும் கார்பன் வெளியேற்றத்தை 55 விழுக்காடாக கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. அதில் பெட்ரோல், டீசல் கார்களுக்கு தடை விதித்தல், மின்சார கார்கள், பொதுப்போக்குவரத்தை ஊக்குவித்தல் உள்ளிட்டவை அடங்கும். அந்த வகையில் ஐரோப்பிய உறுப்பு நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியம் (EU) 2035ஆம் ஆண்டு முதல் பெட்ரோல், டீசல் கார்களுக்கு தடை விதிக்க ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தத்திற்கே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி உறுப்பு நாடுகள், பெட்ரோல், டீசல் கார்களின் உற்பத்தியை 2028ஆம் ஆண்டுக்குள் நிறுத்த வேண்டும். 2035ஆம் ஆண்டு முதல் அந்த வகையான கார்களுக்கு தடை விதிக்க வேண்டும். மின்சார கார்கள் உற்பத்தி, விற்பனை, பயன்பாடு, சார்ஜிங் சென்டர்கள் ஊக்குவிக்கவும் நடைமுறைப்படுத்தவும் வேண்டும்.