கார்தோம் : சூடானில் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே நிலவும் மோதல் போக்குகள் காரணமாக அங்கு மருத்துவ அவசர நிலை ஏற்படும் அவலம் ஏற்பட்டு உள்ளது. சூடானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கடந்த 2021 ஆம் ஆண்டு கவிழ்க்கப்பட்ட நிலையில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.
ராணுவ ஆட்சியை கண்டித்தும் மீண்டும் ஜனநாயக முறையிலான ஆட்சியை ஏற்படுத்தக் கோரியும் பல்வேறு கிளர்ச்சி அமைப்புகள் போராடி வருகின்றன. அந்த வகையில் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே கடந்த சில நாட்களாக கடும் மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த கொடூர தாக்குதலில் 185 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாகவும், ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. உயிரிழந்தவர்களில் இந்தியர்களும் அடங்குவர் எனக் கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிக்கையின் படி சூடானில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான இந்தியர்கள் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சூடானில் தவிக்கும் இந்திய மக்களை மீட்கும் முயற்சியில் மத்திய வெளியுறவுத் துறை முயற்சித்து வருகிறது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், அத்தியாவசிய பணிகள் தவிர்த்து மற்ற நேரங்களில் வெளியே வருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் ஆபத்துகளில் சிக்கி உள்ள இந்தியர்கள் உதவிக்கு அழைக்க தொலைபேசி எண், இணையதள முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.
உதவிகள் தேவைப்படும் இந்தியர்கள் 1800 11 8797 என்ற இலவச எண்ணையும் +91-11-23012113, +91-11-23014104, +91-11-23017905, +91 9968291988 ஆகியோ மொபைல் எண்களையும் அழைக்கலாம் என்றும் அதேநேரம் gov.institution@mea.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
டாங்கிகள், வான் தடுப்பு சாதங்கள், போர் கருவிகள் உள்ளிட்ட நவீன ஆயுதங்களை கொண்டு ராணுவமும், துணை ராணுவமும் போரிட்டு வருவதாக ஐநா பிரதிநிதி வோல்கர் பெர்தஸ் தெரிவித்து உள்ளார். சரமாரியாக நடைபெறும் துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி மக்கள் பலர் படுகாயம் அடைவதாக கூறப்பட்டு உள்ளது.
இந்நிலையில், சூடானுக்கான ஐநா தூதர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஐநா தூதர் எய்டன் ஒ ஹரா தங்கி இருந்த வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஐநா தெரிவித்து உள்ளது. இந்த தாக்குதலுக்கு இரு தரப்பும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என ஐநா தெரிவித்து உள்ளது. இதையடுத்து இருதரப்பு சுமூக பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறும் கோரப்பட்டு உள்ளது.
சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவம் போர் நிறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளங்கன் அறிவுறுத்தி உள்ளார். தொடர் தாக்குதல்கள் காரணமாக காயமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனையில் இடப் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.
மேலும் மருந்து தட்டுப்பாடு காரணமாக பல்வேறு மருத்துவமனை இயங்கு தன்மையை இழந்து தவித்து வருவதாகவும், பல மருத்துவமனைகள் கட்டாயத்தின் பேரில் மூடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : Karnataka Election: ஹிமாச்சல் பாணியில் ஆட்சியை இழக்கும் அபாயம்.. கர்நாடாக பாஜகவில் நடப்பது என்ன?