வஜிமா (ஜப்பான்): மேற்கு ஜப்பானில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தில் நேற்று முன்தினம் (ஜன.04) வரை இறந்தவர்களின் எண்ணிக்கை 98ஆக இருந்தது. ஆனால், தற்போது அனாமிசு பகுதியில் மேலும் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100-ஐ எட்டியுள்ளது.
உயிரிழந்தவர்களில் 59 பேர் வாஜிமா நகரத்திலும், 23 பேர் சுஸுவில் இருந்தும், மற்றவர்கள் அண்டை நகரங்களிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இது மட்டுமல்லாது, 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அதில் சுமார் 27 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று இஷிகாவா அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், டோக்கியோ பல்கலைக்கழகத்தில் உள்ள நிலநடுக்க ஆராய்ச்சி நிறுவனம், மேற்கு ஜப்பானில் மணல் நிறைந்த கடற்கரையில் உள்ள சில இடங்களில் 250 மீட்டர் வரை கடலை நோக்கி நிலநடுக்கம் நகர்வதைக் கண்டறிந்துள்ளனர். மேலும், மீட்புப் பணியாளர்கள், இடிபாடுகளில் சிக்கியிருக்கும் மக்களை மீட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், கடுமையாக பாதிக்கப்பட்ட பிராந்தியமான இஷிகாவா மாகாணத்தில் உள்ள அதிகாரிகள், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் மீட்புப் பணிகளுக்கான உத்திகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டத்தை நடத்தியுள்ளனர். மேலும், பல நாட்களாக இடிந்து விழுந்த வீடுகளில் உயிர் பிழைத்து இருந்தவர்கள் மீட்கப்பட்டு உள்ளனர்.
ஜப்பானின் மேற்கு கடற்கரைப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு, 72 மணி நேரத்திற்குப் பிறகு ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு (ஜன.03) காணாமல் போனவர்களின் எண்ணிக்கையை இன்றுவரை (ஜன.06) 211ஆக குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இதுமட்டுமல்லாது, இஷிகாவா மாகாணத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்றான சுஸுவில் இடிந்து விழுந்த வீட்டில் இருந்து ஜன.3 அன்று ஒரு முதியவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். மேலும், இந்த நிலநடுக்கங்கள் வாஜிமா நகரில் பெரிய தீ விபத்தையும், சுனாமி மற்றும் நிலச்சரிவுகளையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் கரணமாக அப்பகுதிகளில் பாதைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் தண்ணீர், உணவு மற்றும் மருந்து என அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல், அப்பகுதியில் உள்ள மக்கள் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
இந்த சூழ்நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பானிய மக்களுக்குத் தேவையான தண்ணீர், உணவு மற்றும் மருத்துவப் பொருட்கள் உள்பட சுமார் ஒரு லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதாக, அமெரிக்கா நேற்று (ஜன.05) அறிவித்து, மேலும் உதவி அளிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பன்னாட்டு விமான நிலையமாக அயோத்தி.. புதிய பெயருடன் ஒப்புதல் அளித்த மத்திய அமைச்சரவை!